அமெரிரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஈராக் ஒரு துரும்பு July 21, 2008
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: 9\11, America, Barack Obama, Iraq, Osama bin ladan, Pakistan, Pakistan militant, peace, United States, War
trackback
ஈராக் போரை முடிவுக்கு கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த பராக் ஒபமா சிக்காக் கோவில் நடைபெற்ற எதிர்க்கட்சி வேட்பாளருக்கிடையிலான கருத்து மோதலில் மேலதிக படைகளை ஈராக்கிற்கு அனுப்ப வேண்டுமெனக் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வருபவர் முன்னுள்ள முக்கியமான பிரச்சினைகளில் புஷ் ஆரம்பித்து வைத்த ஈராக் போர் முக்கியமானது. தினமும் அங்கு நடைபெற்று வருகின்ற படைகளின் உயிரிழப்பு சொத்துக்களின் அழி உயிர்ப்பலிகள் உலகளவில் கடுமையான எதிர்பலையை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளது. இன்நிலையில் ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கும் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் மக்கெயினுக்குமிடையில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தான் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்கும் பட்சத்தில் ஈராக் போரை முடிவுக்கு கொண்டுவர அர்ப்பணிப்புடன் பாடுபடப் போவதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபமா தெரிவித்திருந்தார். பதவியேற்று 16 மாதங்களுக்குள் ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படையினரை வாபஸ் பெறுவதாக அளித்த வாக்குறுதியிலிருந்து பராக் ஒபமா சிறிது விலகியுள்ளதாக வெளிவரும் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரண்டு வரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
பராக் ஒபமாவுக்கும் அவரது எதிராளியான குடியரசுக்கட்சியை சேர்ந்த மக்கெயினுக்கும் இடையிலுள்ள முக்கிய பிரசார கொள்கை வேறுபாடாக ஈராக் போர் விளங்குகிறது எனக்கருத்துக்கள் வெளி வந்தன. ஆனால் இப்போது இருவருடைய கருத்து நிலைகளும் ஒன்றுபடுவதாக த் தெரிகிறது.
ஈராக் போரானது அமெரிக்காவின் மிகப் பெரிய தவறு என பராக் ஒபமா தெரிவித்த அதேவேளை ஈராக்கில் படையினரை நிலைநிறுத்தி வைத்திருப்பதற்கு மக்கெயின் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
ஈராக் போர் தொடர்பான வாக்குறுதியை மீள் பரிசீலனை செய்ய முடியும் எனக் குறிப்பிட்டிருந்ததையடுத்து ஒபமா தனது வாக்குறுதிகளிலிருந்து தடம் புரள ஆரம்பித்துள்ளதாக பத்திரிகைகள் விமர்சித்திருந்தன.
இந்நிலையில் பராக் ஒபமா பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் ஈராக் போரை மீள் பரிசீலனை செய்வதாக தான் கூறியது அங்கிருந்து அமெரிக்க ஆயுதப் படையினரை 16 மாதங்களுள் வாபஸ் பெறுவது தொடர்பான தனது முந்திய வாக்குறுதியுடன் சம்பந்தப்பட்டதல்ல எனக்கூறிய ஒபமா ஈராக்கிய படையினர்களுக்கு பயிற்சியளிக்கவும் அல்கொய்தாவுக்கு எதிராக போராடவும் தேவையான படை பலம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தனது அக்கூற்று அமைந்ததாக தெரிவித்தார். ஊடகங்கள் தனது கருத்து வெளிப்பாட்டை தவறாக புரிந்து செய்திகளை வெளியிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியும் இருக்கிறார்.
நிலைமை இவ்வாறிருக்க ஈராக்கில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஈராக்கில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெவ்வேறு குண்டு வெடிப்புகளில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர். இதில் ஒரு குண்டு வெடிப்பு ஈராக் ஜனாதிபதி ஜலால் தலாபானி அரசியல் கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொஹமட் ரமதன் ஈஸா என்ற இந்த அரசியல் கட்சித் தலைவரது வீட்டின் வெளிப்புறமாக இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அவரின் மனைவி, இரு பிள்ளைகள், சகோதரர் ஒருவர், மாமியார் மற்றும் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளனர். இத்தாக்குதலில் மொஹமட் ரமதன் ஈசாவும் அவரின் ஏனைய 3 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் படுகாயத்திற்குள்ளாகியுள்ளனர்.
அதே சமயம் தலைநகர் பக்தாத்தில் சந்தையொன்றுக்கு அருகே பொலிஸ் வாகனமொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதுடன் 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் உள்ளடங்குகிறார்.
மேலும் தியலா மாகாணத்தில் இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தெருவோர குண்டுத் தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியானதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈராக் போர் தொடர்பில் குற்றஞ்சாட்டி வந்த பராக் ஒபமா, தற்போது தனது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஈராக்கிலான அமெரிக்க படைகளை அதிகரிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி உரையாற்றியுள்மை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு விஜயங்களை மேற்கொகிறார் ஒபாமா.
பரந்தளவான தந்திரோபாய இலக்குகளின் பிரகாரம் போருக்கு முடிவு கட்டுவது அவசியமாகவுள்ளதுடன் தலிபான்களினதும் அல் கொய்தா போராளிகளினதும் புகலிடமாக விளங்கும் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் போரை ஆரம்பிக்க வேண்டியும் உள்ளதுஎன்பது ஒபமாவின் சிந்தனையாக உள்ளது என்பது அவரது கருத்துக்களில் இருந்து வெளிப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாதத்தை பொறுத்தரை ஈராக் முக்கிய இடம் வகிக்கவில்லை. ஒரு போதும் வகிக்கவும் போவதில்லை என்பது ஒபாமாவின் முடிவாக இருந்தாலும் ஈராக்கில் நிலையான இராணுவ தளங்களை ஏற்படுத்துவது தொடர்பான தவறான வழிகாட்டலுக்கு அமெரிக்கப் படையினரையும் வளங்களையும் வீணடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.
இதற்கிடையில் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தின் வடக்கே செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 23 பேர் பலியானதுடன் 30 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பக்தாத்திலிருந்து 60 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பகுபாவில் இராணுவ ஆட்சேர்ப்பு நிலையமொன்றின் முன்பாக கூடி நின்றவர்களிடையே நுழைந்து மேற்படி தற்கொலை குண்டுதாரிகள் குண்டை வெடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. தியலா மாகாணத்தின் தலைநகரான பகுபா ஈராக்கின் வன்முறை அபாயம் நிறைந்த பிரதேசங்களிலொன்றாக விளங்கி வருகிறது.
இந்த குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர் இராணுவ உடையில் இருந்ததாகவும் மற்றையவர் சாதாரண உடையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈராக் விடயத்திலிருந்து விடுபட்டு அல் கொய்தாவினை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வுள்ளதாக கருத்து வெளியிடுவதுடன் உறுதியுடனும் இருக்கும் அமெரிக்கத் தேர்தல் வேட்பாளர்களுக்குப் பதிலளிப்பதாக பாகிஸ்தானில் ஒஸாமா பின்லேடனை வேட்டையாடுவது தொடர்பில் அமெரிக்கப் படையினருக்கோ அன்றி ஏனைய வெளிநாட்டு இராணுவத்திற்கோ இடமில்லை. உள்நாட்டு பிராந்தியத்தில் அல் கொய்தா தலைவரைத் தேடுவதற்கு அவர்கள் எவருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என பாகிஸ்தானின் வெளிநாட்டு அமைச்சர் ஷா முஹமட் குரேஷி தெரிவித்திருக்கின்றமை புதிய குழப்பம் ஒன்றைத் தோற்றுவித்திருக்கிறது.
ஒஸாமா பின்லேடன் விவகாரத்தில் எமது உள்நாட்டு படையினர், துணைப் படையினர் ஆகியோரை போதுமான அளவில் நியமிப்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையாகும். இது தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு உள்ளது. வெளிநாட்டுப் படையினர் உள்நாட்டில் தலையிடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பிராந்தியத்தில் தலிபான்களும் ஏனைய போராளிகளும் பலம் பெற்று வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையிலேயே பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் உலகளவில் ஆதிக்கத்தைப் பலத்துடன் வைத்திரக்க நினைக்கும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியும் அதன் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு அமைவாகவே செயற்படுவார் என்பதற்கு அடுத்த வருடத்தில் பதில்கள் கிடைக்கும்.
1778ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த 300 வருட வரலாற்றைக் கொண்ட அமெரிக்கா உலகிலுள்ள அனைத்து நாடுகளையுமே கட்டி ஆளும் பலத்துடன் திகழ்கிறது. அமெரிக்காவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. என்பதை அனைத்து நாடுகளும் கவனமாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் தெரிந்தோ தெரியாமலோ இருந்துவருகிறது. ஆனால் அமெரிக்கா அனைத்து நாடுகளையும் பார்த்துக் கொண்டே இருக்கிறது.
கொள்கைக்கட்டமைப்புகளில் ஸ்த்திரமானதொரு நிலையில் இருக்கும் அமெரிக்கா யாருக்கும் விட்டுக் கொடுக்காத வெளிநாட்டுக் கொள்கைகள் உள்நாட்டுச்சட்டங்கள் என இறுக்கமான கட்டமைப்புடன் இருப்பதே அதன் தலைநிமிர் தன்மைக்குக் காரணமாகும்.
இவ் வருட இறுதியில் நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக்கட்சி வெற்றி பெறுமா ஜனநாயகக் கட்சி வெல்லுமா என்பதற்கான பதில் காத்திருப்பாகவே இருக்கும். அதன் பின்னர் இன்னும் ஒரு புஷ் வருவாரா அல்லது மாற்றமானவராக அவர் இருப்பாரா என்பதைப் பார்க்கலாம்.
நன்றி மெட்ரோ நியூஸ் 18.07.08



















Comments»
No comments yet — be the first.