தெற்காசிய பிராந்திய நலன்களை முன்நிறுத்தும் சார்க் மாநாடு. August 1, 2008
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: Afghanistan, Bangladesh, Bhutan, India, Maldives, nepal, Pakistan, SAARC, Sri Lanka
trackback
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (SAARC) 15ஆவது உச்சி மாநாடு நாளை சனிக்கிழமை (02.08.08) தொடங்குகிறது. சனிக்கிழமை நடைபெறும் உச்சி மநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திடப்படலாம் என்ற அறிவிப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. நாடுகள் பங்கு பெறும் சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கை இவ்வருடம் பெற்றுக் கொள்கிறது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான 15 ஆவது சார்க் மாநாடு எமது மக்களுக்கான ஒத்துழைப்பு எனும் தொனிப் பொருளில் கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமான சார்க் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சிக்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் 29ஆம் திகதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான கூட்டம் 29ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர்கள் மட்டத்திலான கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் தொடர்பிலான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் செயலர்கள் குழுவின் தலைமைப் பொறுப்பினை இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹோகன் உத்தியோக பூர்வமாக சிவ்சங்கர் மேனனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
நேற்றைய தினம் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு நடைபெற்றத. இதில் முக்கியமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாக்கிஸ்தானின் வெளிநாட்டடைச்சர் ஆகியோர் உத்தியோக பூர்வ சந்திப்பொன்றில்ஈடுபட்டனர். இருப்பினும் இவர்களது சந்திப்பு குறித்த தகவல்களை உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இம்முறை நடைபெறுகின்ற சார்க் மாநாட்டின் முக்கிய நோக்கங்களாக சார்க் நாடுகளின் எதிர்கால நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்தல் மற்றும் வலய நாடுகள் எதிர்கொள்கின்ற பயங்கரவாதம், வறுமை ஒழிப்பு, உணவு சேமிப்பு உள்ளிட்ட காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வது தொடர்பில் விரிவாக பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
முக்கியமாக சீபா எனப்படும் பரந்தளவான பொருளாதார ஒப்பந்தத்தில் (CEPA) கையெழுத்திடுமாறு கொழும்பு வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கை, இந்தியாவுக்கிடையிலான பரந்தளவான பொருளாதார ஒப்பந்தம் தொடர்பில் இரு தரப்புக்குமிடையில் இவ்வருட முற்பகுதியில் இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது.
ஜே.வி.பி. உட்பட எதிர்க் கட்சிகள் இந்த சீபா ஒப்பந்தத்தினால் இலங்கை பொருளாதாரத்துக்கு எந்தவித அனுகூலமும் சாதகத்தன்மையும் ஏற்படாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவ்வொப்பந்தத்தின் மூலம் உள்நாட்டுக் கைத்தொழில் துறைகள் மோசமான பாதிப்பை எதிர்நோக்க நேரிடுமென ஜே.வி.பி. தெரிவித்திருக்கிறது.
ஒப்பந்தம் குறித்து தாம் இன்னும் பரிசீலித்து வருவதாக இலங்கை தெரிவித்திருக்கின்ற நிலையில் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் முதலாம் திகதி கொழும்பு வரும் இந்தியப் பிரதமர் மன்மோன் சிங், இலங்கை ஜனாதிபதியுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் சீபா ஒப்பந்தம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என நம்பப்படுகிறது. அதே போன்று சார்க் வலய நாடுகளுக்கிடையில் சார்க் அபிவிருத்தி நிதியத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆகஸ்ட் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சார்க் வலய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் சார்க் உச்சி மாநாட்டில் சார்க் வலய நாடுகளுக்கிடையில் பொருளாதாரம், சமூகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நிதியம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.
சார்க் அபிவிருத்தி நிதியமொன்று ஏற்படுத்தப்படினும் அந்த நிதியம் தெற்காசிய அபிவிருத்தி நிதியத்தின் கீழ் ஒரே குடையின் கீழே இயங்கும் என்றும் சார்க் அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்கப்படுகிறது.
சார்க் அபிவிருத்தி நிதியம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கொண்டு ஆரம்பிக்கப்படுவதுடன் தெற்காசிய அபிவிருத்தி நிதியத்தில் மிகுதியாகவுள்ள 700 மில்லியன் அமெரிக்க டொலரும் இந்த நிதியுடன் இணைத்துக் கொள்ளப்படவிருகின்றது. அது மட்டுமல்லாது சார்க் அபிவிருத்தி நிதியத்திற்கு தேவையான மேலதிக நிதியை வலய நாடுகளிடமிருந்து திரட்டிக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம், சமூகம் மற்றும் உட்கட்டமைப்பிற்காக இந்த நிதி செலவிடப்படவிருப்பதுடன் இதன் மூலமாக சார்க் வலய நாடுகளுக்கிடையில் வறுமையை ஒழிப்பதற்கான வேலைத் திட்டத்தை முன்னெடுக்கலாம் எனத்திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருத்தமே இல்லாத தருணத்தில் சார்க் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியிருக்கிறது. சார்க் மாநாட்டினால் நாட்டு மக்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகளை பட்டியல் இட்டுக்காட்ட முடியுமா என்று அரசாங்கத்திடம் சவால் விடுத்துமுள்ளது.
அரசியல்களைத் தொட்டுப்பார்த்து அதன் விளக்கங்களை தர்க்கத்திற்கு உட்படுத்துவதற்கு முடியாத நிலையில் மாலைதீவில் நடைபெற வேண்டிய15 ஆவது சார்க் மாநாட்டை அந்யாடு அங்குள்ள பொருளாதார பிரச்சினைகள், அரசியல் மற்றும் பயங்கரவாதப் பிரச்சினைகள் காரணமாக மாநாடு நடத்தப்படுவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
பொது மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி அவர்களது பணத்தினை கரியாக்கும் மாநாடுகள் எந்த நாட்டிலும் இடம்பெற்றதாக வரலாறுகள் இல்லை.
2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற டோக்கியோ மாநாட்டில் கலந்துகொண்ட 52 நாடுகளில் இலங்கையும் பங்கேற்றிருந்தது.
சார்க்கிற்கு 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுகின்றன.அதிலும் பெருமளவு தொகை பாதுகாப்பிற்கே செலவிடப்படுகிறது. ஆனால் ஜீ 8 மாநாட்டுக்கு 285 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது என்ற ஒப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு வளர்ச்சியடைந்த நாடுகளின் பெரியதொரு அமைப்புடன் ஒப்பிடுமளவிற்கு சார்க் உள்ளதா என்ற கேள்வியை இப்போது கேட்டுக் கொள்ள வேண்டும்.
பொது மக்கள் எமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் மாநாட்டுக்கு எதிராக எந்தவிதமான கருத்தையும் வெளியிடுவதில்லை என்றாலும் மக்களை பெரும் இன்னலுக்குட்படுத்தி இம்மாநாடு நடத்தப்படுவதாகவே கூறமுடிகிறது.
எது எவ்வாறானாலும் தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒன்றியத்தில் (சார்க்)உறுப்பு நாடாக இணைவதற்கு மியன்மார் (பர்மா) உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. மியன்மார் உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ளப்பட்டால் சார்க் அமைப்பின் நாடுகளின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்வடையும்.
சார்க் அமைப்பின் எட்டாவது புதிய உறுப்பு நாடாக கடந்த வருடம் இணைத்துக் கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் கொழும்பில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான 15 ஆவது சார்க் மாநாட்டில் தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையிலும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இம்முறை நடைபெறும் மாநாட்டில் அவதானிப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, தென் கொரியா, ஈரான், மொறீசியஸ்ஆகிய ஏழு நாடுகளுக்கு மேலதிகமாக அவுஸ்திரேலியாவும் மியன்மாரும் அவதானிப்பாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
288 கோடி ரூபா செலவில் நடத்தப்படுகின்ற சார்க் மாநாடு முடிந்த கையோடு விலைவாசி அதிகரிப்பினை தவிர்க்க முடியாத நிலைமை ஏற்படலாம். சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பு என்ற போர்வையில் கொழும்பில் பல பகுதிகளில் மக்களின் குடியிருப்புக்கள் அகற்றப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைய பொருளாதார நெருக்கடிமிக்க நேரத்தில் சார்க் மாநாடு தேவைதானா? என்பதே எமது கேள்வியாகும்.
சார்க் மாநாட்டின் பாதுகாப்பை இலங்கைப் படையினரே மேற்கொள்வார்கள் என்று சுகாதார அமைச்சரும் சபை முதல்வருமான நிமால் சிறிபால டி சில்வாவும், அந்தந்த நாட்டுத் தலைவரின் பாதுகாப்பிற்காக ஒரு தொகை படையினர் வருகை தருவார்கள் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவும், உள்நாட்டு பாதுகாப்பில் வெளிநாடுகள் தலையிட முடியாது என்று கொழும்பு மாவட்டத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான நிமால் மெதிவக்க ஆகியோர் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் 15ஆவது மாநாடு குறித்த பல்வேறு கருத்து மரண்பாடுகள் விமர்சனங்கள் இருக்கின்ற போதும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நலன்களில் முக்கியப்படுத்தியே பேசப்படுகிறது.
பிராந்தியத்திலுள்ள மக்களின் நலன்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட சார்க் அமைப்பின் 15ஆவது மாநாட்டில் பாதுகாப்பு நலன்களே முக்கியப்படுத்தப்பட்டு பேசப்படும் என்று தெரியவருகிறது. கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடத்தப்படும் சார்க்மாநாட்டின் நிறைவில் முடிவுகள் நல்லதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி மெட்ரோ நியூஸ் 01.08.08


















Comments»
No comments yet — be the first.