இருதரப்பு பேச்சுக்களில் தங்கியுள்ள மத்திய கிழக்கின் அமைதி July 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.trackback
பலஸ்தீனம் என்ற நாடு விரைவில் அமைக்கப்படும் என்று மீண்டும் தெளிவுபடுத்தப்பட்ட இஸ்ரேலின் ஆதிக்க நோக்கத்தை முறியடிக்கும் வகையில் பலஸ்தீன அதிகார சபையின் பிரதமர் சலாம் பயாட் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேலின் புதிய பிரதமராக பென்ஜமின் நெத்தன் யாஹூ தெரிவு செய்யப்பட்டால் பலஸ்தீனத்தில் அமைதி நிலை திரும்பும். அந்த மக்களுக்கு ஒரு நிம்மதி நிறைந்த வாழ்க்கை கிட்டும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் இரு வாரங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்த இராணுவ பலம் இல்லாத பலஸ்தீனத்தையே இஸ்ரேல் அங்கீகரிக்கும் என்ற கருத்து மத்திய கிழக்கில் பெரும் குழப்பத்தைக் கொண்டுவந்திருந்தது. இன்நிலையில் பாலஸ்தீனப்பிரதமர் பலஸ்தீன நாடு குறித்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன் யாஹூவின் உரையை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றிருந்தார். நெத்தன் யாஹூ வின் கருத்தானது சமாதான முயற்சிகளில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியிருக்கிறார். கடந்த வாரத்தில் பென்ஜ மின் நெத்தன் யாஹூ பலஸ்தீனை ஒரு தனி பிராந்தியமாக ஏற்றுக் கொள்ளத் தயார். அதேபோல் இஸ்ரேலை தங்களின் நாடாக பஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் இராணுவ பலமற்றதாக பலஸ்தீனம் மாற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
பென்ஜமின் நெத்தன் யாஹூ பதவியேற்றது முதல் பலஸ்தீனத்தை தனிநாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் உருவான கடுமையான எதிர்ப்பு காரணமாக அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவூதி அரேபியா, எகிப்து, குவைத் போன்ற நாடுகள் கொடுத்த அழுத்தத்தினால் பென்ஜமின் நெத்தன் யாஹூ பலஸ்த்தீனம் குறித்து இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற ஹமாசின் கருத்துக்களுக்குள் வந்திருக்கும் இராணுவமில்லாத ஆகாயமில்லாத ஒரு தேசமாக பலஸ்தீனை ஏற்றுக் கொள்வதற்குத் தாம் தயார். அத்துடன் பலஸ்தீனர்கள் முக்கியமாக உரிமை கோரும் ஜெருஸலம் பிரிக்க முடியாத இஸ்ரேலின் தலைநகரமென்றும் இஸ்ரேல் பிரதமர் உரையாற்றியிருக்கிறார்.
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன் யாஹூவின் உரையை நிராகரித்திருக்கிற பலஸ்தீனத் தரப்பினர் சமாதான முயற்சிகளைச் சீரழிக்கும் வகையில் இஸ்ரேலியப் பிரதமர் கருத்து வெளியிட்டிருப்பதாக தெரிவித்திருந்தனர். இஸ்ரேல், பலஸ்தீன பிணக்குகளைத் தீர்த்துவைக்க அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேரடியாகத் தலையிட வேண்டு மென்று பலஸ்தீனம் தெரிவித்திருக்கிறது.
ஆமை வேகத்தில் செல்லும் சமாதானப் பேச்சுக்களைத் துரிதப்படுத்தி மேற்குக் கரையில் யூத குடியேற்றங்களை நிறுவுவதென்ற இணக்கப்பாட்டுக்கு இஸ்ரேலைக் கொண்டுவர அமெரிக்கா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று பலஸ்தீனத் தரப்பினர் கோரியிருக்கின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேலின் நிபந்தனைகள் அமைதி உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களை அழித்துவிடுமென எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் எச்சரித்திருக்கிறார். பலஸ்தீன அரசொன்றை உருவாக்குவது தொடர்பில் முதன்முறையாக கருத்துத் தெரிவித்திருந்த இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெத்தன் யாஹூ, இஸ்ரேல் ஒரு யூத நாடு என்பதை பலஸ்தீனர்கள் அங்கீகரிக்க வேண்டுமெனவும், இராணுவ மற்றும் ஆயுத பலமற்ற பலஸ்தீன அரசொன்றையே இஸ்ரேல் அங்கீகரிக்குமெனவும் தெரிவித்திருக்கின்றமை மோசமானதொரு அரசியல் சூழ்நிலையைத்தான் தோற்றுவிக்குமே தவிர நல்லதொரு அமைதி நிலையைக் கொண்டுவராது எனக் கூறியிருக்கிறர்.
அமைதிப் பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வரும் எகிப்து இஸ்ரேலை ஒரு யூத நாடாக அங்கீகரிக்க வேண்டுமென்ற கோரிக்கை அமைதிக்கான வாய்ப்புக்களை சிக்கலாக்கும் என்பதனை அழுத்தமாக தெளிவுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலை அங்கீகரித்த முதலாவது அரேபிய நாடு எகிப்து என்பதுடன் மத்திய கிழக்கு அமைதி நடவடிக்கைகளின் முக்கிய மத்தியஸ்தராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே மத்திய கிழக்கு முரண்பாட்டுக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெத்தன் யாஹூ விதித்துள்ள நிபந்தனைகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
பென்ஜமின் நெத்தன் யாஹூவின் கருத்து பலஸ்தீன, அரேபிய மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடுகளுக்கு விடுக்கப்பட்ட சவாலென பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் தெரிவித்திருந்தார்.
ஆனால், பென்ஜமின் நெத்தன் யாஹூவின் நிலைப்பாடு அமைதி முயற்சிகளை நோக்கிய முக்கிய நடவடிக்கையென அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேமென அவர் பிரகடனப்படுத்தியிருப்பதானது அகதிகள் விவகாரம் பேச்சுக்களில் எடுக்கப்படாது என்பதையும் குடியேற்றங்கள் நிறுத்தப்படாது என்பதையும் வெளிப்படுத்துவதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன. அத்துடன் சுதந்திரமானதும் இறையாண்மையுடையதுமான பலஸ்தீன அரசொன்றை அமைப்பது சாத்தியமற்றதென்ற செய்தி இஸ்ரேலியப் பிரதமரின் உரையில் பொதிந்திருக்கும் விடயமாகப் பார்க்கப்படுகிறது.
உரிமைகள் மறுக்கப்பட்ட அரசொன்றை உருவாக்குவதற்காக ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தியிருக்கத் தேவையில்லை என்பது இங்கு நிச்சயப்படுத்தப்படுகின்ற நிலையில் பென்ஜமின் நெத்தன் யாஹூவின் நோக்கத்தை புட்டுப்புட்டு வைக்கும் பலஸ்தீனர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் குழப்பம் இஸ்ரேலின் முழுமையான முகத்தினை மீண்டும் ஒரு முறை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது என்றே கூற வேண்டும்.
தந்திரோபாய அடிப்படையில் இஸ்ரேலியப்பிரதமர் தெரிவித்த இராணுவப் பலமற்ற பலஸ்தீனம் என்ற கருத்து இஸ்ரேலை உரித்து உலகத்துக்குக் காட்டியிருக்கிறது, ஆனாலும் மேற்குலகம் என்கிற அமெரிக்கா தனது ஆதரவு நாடு என்ற காரணத்திற்காக அதனையும் சாதகமாக்கப்பார்க்கிறது என்ற நிலையில் மத்தியகிழக்கின் அமைதிப் பேச்சுக்கள் இன்னமும் பின்தள்ளப்படும் நிலைமை உருவாகும் என்றே நம்புவோம்.
பலஸ்தீன அரசொன்றை இஸ்ரேல், அங்கீகரிக்க வேண்டுமானால் ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட யூதர்களின் நாடாக இஸ்ரேலை பலஸ்தீனர்கள் அங்கீகரிக்க வேண்டுமென்பதுடன், இராணுவத்தையோ, ரொக்கெட் அல்லது ஏவுகணைகளையோ, மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகளையோ கொண்டிராத முழு அளவிலான இராணுவ பலமற்ற பிராந்தியமாக பலஸ்தீன அரசு இருக்க வேண்டுமென பென்ஜமின் நெத்தன் யாஹூ சொல்வது போல் ஒரு பலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ள அதன் மக்கள் ஒரு போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்ற உண்மையை உணராத வரையில் உலக நாடுகளின் முயற்சிகளோ அரபு நாடுகளின் முயற்சிகளோ பலிக்கப்போவதில்லை என்பது மாத்திரமே இந்த இடத்தில் சொல்லக் கூடியது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பலஸ்தீனத்தின் பிரதமர் சலாம் பயாட் ஜெருசலேமின் கிழக்கை தலைநகராகக் கொண்ட பலஸ்தீன அரசை தாம் உருவாக்கப்போவதாகவும்.
இஸ்ரேலுக்கிடையேயான உடன்பாட்டின் விடயங்களைத் தெரிந்து கொள்ளாமல் நெத்தன்யாஹூ கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த நிலையில் இரு நாடுகளினதும் பேச்சுக்கள் மூலமே மத்திய கிழக்கில் அமைதி ஏற்படும் என்பது உறுதியானதாகும்.
26.06.2007


















Comments»
No comments yet — be the first.