மக்களின் ஜனநாயகத்துக்காக களமிறங்கிய ஹொண்டுராஸின் இராணுவம் July 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.trackback
உலக நாடுகளின் அழுத்தம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வலியுறுத்தல்கள் ஹொண்டுராஸ் நாட்டின் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருமா இல்லையா என்பது தெளிவில்லாததாகவே இருக்கிறது.
இராணுவ ஆட்சியை நடத்தும் மியன்மார் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஹொண்டுராஸ் சாதாரணமானதே. ஆனாலும் இராணுவம் இருப்பது நாட்டு மக்களது ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்காக என்பதைச் சில வேளைகளில் பலர் மறந்து விடுகின்றனர். இதனை ஹொண்டுராஸ் இராணுவம் உலகுக்கு ஒரு முறை ஞாபகப்படுத்தியிருப்பதாகவே உணர முடிகிறது.
இந்நிலையில், திடீர் இராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஹொண்டுராஸில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஷிலேயாவை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவதைப்பற்றி யாரும் நினைத்துப் பார்க்கக் கூடாது என அதன் இடைக்கால ஜனாதிபதியான ரொபேட்டோ மிச்லெற்றி தெரிவித்திருக்கிறார்.
மூன்று நாட்களுக்குள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவேன் என்று நாடு கடத்தப்பட்ட ஜனாதிபதி ஷிலேயா அறிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இடைக்கால ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்திருக்கிறார்.
மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.06.09) திடீர் புரட்சியை நடத்திய அந்நாட்டு இராணுவம், ஜனாதிபதி ஷிலேயாவைக் கைது செய்து நாடுகடத்தியது. இதைத்தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதியாக ரொபேட்டோ மிச்லெற்றி பாராளுமன்றத்தால் நியமிக்கபட்டார்.
நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி மானுவெல் ஷிலேயாவை நாட்டுக்ககுள் அனுமதிக்க வேண்டும். அத்துடன் இராணுவப் புரட்சி நடத்தி அமைக்கப்பட்ட அரசாங்கம் தவறிழைத்திருக்கிறது உள்ளிட்ட காரணங்களை முன்நிறுத்தி அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
ஹொண்டுராஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஜனாதிபதி ஷிலேயா அயல் நாடான கோஸ்டாரிக்காவில் தஞ்சமடைந்தார்.
இவருடைய பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரியில் நிறைவடையும் நிலையில் இந்த புரட்சி நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர் மீண்டும் நாட்டுக்குள் நுழையும் பட்சத்தில் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் புதிய இடைக்கால ஜனாதிபதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினார்.
இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஹொண்டுராஸின் பாராளுமன்றமான காங்கிரஸ் சபாநாயகர் ரொபேர்டோ மிச்செலெற்றியின் இந்த நடவடிக்கை தவறானது என வெளிநாடுகள் தெரிவித்திருக்கின்றன.
அத்துடன் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதியை நாட்டுக்கு அழைக்குமாறு கோரியுள்ளன. இராணுவப் புரட்சியினால் கோபமடைந்துள்ள ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் வன்முறைச் சம்பவங்கள் பரவலாக இடம்பெறலாமென அஞ்சப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரியில் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் ஹொண்டுராஸின் ஜனாதிபதி ஷிலேயா தனது பதவிக்காலத்தை நீடிக்கும் பொருட்டு சர்ச்சைக்குரிய அபிப்பிராய வாக்கெடுப்பொன்றை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே இராணுவப் புரட்சி இடம்பெற்றுள்ளது.
ஹொண்டுராஸின் அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவர் ஒரு முறை மட்டுமே ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.தான் தொடர்ந்து பதவி வகிக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த ஷிலேயா இதற்காக பொதுமக்கள் மத்தியில் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இதற்கு இராணுவத்திடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது . இதற்கு முக்கியமாக இராணுவத் தளபதி காரணமாக இருந்தார். அதனால் அவர் கடந்த வாரத்தில் ஷிலேயாவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஹொண்டுராஸின் ஜனாதிபதியாக தொழிற்கட்சியைச் சேர்ந்த மானுவெல் ஷிலேயா 2005 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.
பதவி நீடிப்புக்கான வாக்கெடுப்பு மற்றும் அரசியலமைப்பு திருத்தம் சட்டவிரோதமான முறையில் நடத்தப்படவிருப்பதாக ஹொண்டுராஸின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் ஷிலேயாவின் கட்சியினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஹொண்டுராஸின் தலைநகர் டெகுசிகல்பாவுக்கு அருகிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றிவளைத்த இராணுவம் அவசர அவசரமாக ஷிலேயாவைக் கைதுசெய்து கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தினர்.
அடுத்த நிமிடமே ஜனாதிபதி மாளிகை மற்றும் அரச நிர்வாகம் அனைத்தும் இராணுவத்தினர் வசம் கொண்டுவரப்பட்டது.
இராணுவத்திற்கெதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட ஷிலேயாவின் ஆதரவாளர்கள் இராணுவத்தினரை நோக்கி கற்களை வீசியதுடன் கோஷங்களையும் எழுப்பினர். ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதற்காக இராணுவம் கடுமையான கண்ணீர்ப்புகைக்குண்டுப் பிரயோகம் செய்தது.
இதற்கிடையில் கோஸ்டாரிகா தலைநகர் சான் ஜோஸைவில் தஞ்சமடைந்துள்ள ஷிலேயா இராணுவத்தினரின் செயலை சதியெனவும் கடத்தல் எனவும் தெரிவித்ததுடன் பதவிக்காலம் முழுமைக்கும் தான் பதிவியிலிருக்க விரும்புவதாகவும் மாற்று அரசை அங்கீகரிக்க மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன் மீண்டும் தான் பதவியில் அமரப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஹொண்டுராஸில் அதிகரித்துவரும் பதற்றங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியம் இராணுவப் புரட்சியைக் கண்டித்துள்ளது. ஷிலேயாவை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு ஐ.நா. செயலர் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
ஹொண்டுராஸில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் அவசர சந்திப்பொன்றுக்கு அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் இது சதி நடவடிக்கை என்று தெரிவித்துள்ள வெனிசுலா ஜனாதிபதி ஹயூகோ சாவேஷ் இச் சதியை முறியடிக்கும் இராணுவ நடவடிக்கையொன்றினைத் தாம் மேற்கொள் வேண்டிய நிலை உருவாகலாம் என்று எச்சரித்துள்ளார்.
தென் அமெரிக்க இடதுசாரி நாடுகளின் அமைப்பில் ஹொண்டுராஸும் அங்கம் வகித்துவருகிறது. இவ் அமைப்பின் தலைவராக சாவேஷ் இருந்து வருகிறார். அந்த வகையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்திருக்கிறார்.
தனது இராணுவத்தினரை உஷார் நிலையில் வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெனிசுலா ஜனாதிபதி ஹுயூகோ சாவேஷ் மற்றும் பொலிவிய ஜனாதிபதி மொராலிஸ் ஆகியோரும் தமது பதவிக்காலத்தை நீடிப்பதற்காக அரசியலமைப்பு திருத்தத்திற்காக அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நாடான ஹொண்டுராஸில் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போது கோஸ்டாரிக்காவிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மானுவெல் ஹொண்டுராஸின் ஜனாதிபதி நானே எனக் கூறி வருகின்ற நிலையில் புதிய ஜனாதிபதி, ஷிலேயாவை நாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் உலக நாடுகள் உள்ளிட்ட யாரையும் முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் சர்வதேச செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
ஹொண்டுராஸ் (Honduras) மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு மக்களாட்சி நாடாகும். இது முன்னர் ஸ்பானிய ஹொண்டுராஸ் என அழைக்கப்பட்டது. இதன் எல்லைகளில் மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சல்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே கரிபியன் கடலின் பெரும் பகுதியில் ஹொண்டுராஸ் வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.
02.07.2009


















உன்னை விட உன்ட சைட் நல்லா இருக்கு