வன்முறைகள் தொடரும் என்ற எதிர்பார்புடன் வெளியேறும் அமெரிக்கப் படைகள் July 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.trackback
அமெரிக்கப் படைகள் வெளியேற ஆரம்பிக்கும் தினத்தை ஈராக் கோலாகலமாகக் கொண்டாடியது. அங்கு 30 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் ஜூன்30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சதாம் தலைமையிலான ஈராக் அரசு அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிக்கிறது. ஏராளமான இரசாயன ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கிறது. அதனால் பிராந்தியத்துக்கே ஆபத்து என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டியதுடன் ஈராக்கில் உள்ள அணு உலைகளைச் சோதனையிட சர்வதேச முகவர் அமைப்புக்கு ஈராக் அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது எனக் கூறி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு கூட்டுப் படை ஈராக் மீது படையெடுத்தது. மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு பெருமளவான அழிவின் பின்னர் சதாம் ஹுசைன் தலைமையிலான ஆட்சி ஈராக்கில் அகற்றப்பட்டது. தற்போதுள்ள புதிய ஆட்சியை தனக்கு ஆதரவானதொரு ஆட்சியை அமெரிக்கா அங்கு ஏற்படுத்தியது.
புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டதை அடுத்து அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறிவிடும் என்று கூறப்பட்ட நிலையில் படைகள் வெளிறேய வேண்டும் என்று அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கூட பரவலாகக் கோரப்பட்டதுடன் ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. நீண்டகால முயற்சிகளின் பலனாக புஷ் ஆட்சியில் நடைபெறாத விடயம் ஒன்று ஒபாமாவின் ஆட்சியினால் இப்போது நிறைவேற்றப்படுகிறது.
அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான பாதுகாப்பு உடன்படிக்கையொன்று அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து படிப்படியாக படைகளை வாபஸ் பெறுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் ஈராக்கில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. உடன்படிக்கையின் பிரகாரம் இந்த ஜூன் 30 ஆம் திகதியிலிருந்து படைகளைப் படிப்படியாக விலக்கிக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் படையின் முதல் பிரிவு ஈராக்கில் இருந்து வெளியேறியது. தினமும் பலர் கொல்லப்பட்ட வண்ணமுள்ள நிலையில் ஈராக்கின் பாதுகாப்பை அந்நாட்டுப் படைகள் பார்த்துக் கொள்ளும், அதற்கேற்ற வகையிலான பயிற்சிகள் ஈராக் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
அமெரிக்கப் படைகள் வெளியேறும் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட ஈராக் அரசு முடிவு செய்தது. படைகள் வெளியேறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே கொண்டாட்டங்கள் ஈராக்கில் ஆரம்பமாகின. அமெரிக்கப்படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறுவது தமக்குப் பெரும் வெற்றி என்று ஈராக் பிரதமர் அல்மாலிகி தெரிவித்திருந்தார்.
ஈராக்கிய நகரங்கள் மற்றும் வீதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப்படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முகாம்களுக்குள் முடங்க ஆரம்பித்துள்ளதாக ஈராக்கியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் 2011 ஆம் ஆண்டிலேயே இங்கிருந்து முழுப்படைகளும் வெளியேறுமென்பது குறிப்பிடத்தக்கது.
ஜுன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஈராக்கிலுள்ள அனைத்து அமெரிக்கத் துருப்பினரும் தங்களது பாதுகாப்பு பொறுப்புகளை ஈராக் அரச படைகளிடம் ஒப்படைத்துள்ளதாக அங்குள்ள அமெரிக்க கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 8 மாதங்களாக படிப்படியாக ஈராக்கின் பாதுகாப்பு, பிரதமர் நூரி அல்மாலிகி தலைமையிலான அரசாங்கத்தின் படையினரிடம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நடவடிக்கைகள் முடிவுற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் முழுதாக ஈராக் இராணுவம் தனது நாட்டின் பாதுகாப்பை பொறுப்பேற்றுக் கொண்டது.
பாரிய குண்டு வெடிப்புகள் வன்முறைகளுக்கு மத்தியிலும் ஈராக் அரசாங்கம் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ள நிலையில் ஈராக் இராணுவத்துக்குத் தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவற்றை அமெரிக்க இராணுவம் வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டது முதல் இருந்து வந்த நிலைமாறி பல் நாட்டு படைகளின் ஆட்சி முடிவடைந்தமைக்கான அடையாளமாக அமெரிக்கப்படடைகளின் வெளியேற்றம் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்து.
ஈராக் மக்கள் முழுமையான சுதந்திரத்தை அனுபவிப்பதாகப் பேசப்பட்டாலும் இச்சந்தர்ப்பத்தில் ஈராக்கில் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ஈராக் படைகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையில் படைகளின் வெளியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஆற்றிய விசேட உரையில் அரசியல், பாதுகாப்பை ஸ்திரமாக்க ஈராக் தலைவர்கள் கடுமையான தெரிவை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் வன்முறைகள் தொடருமென்பது எமக்குத் தெரியும்.
ஈராக் படைகள் பிரிவினை வாதத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க இராணுவம் ஈராக்கை விட்டு முற்றாக வெளியேற ஆரம்பமான நிலையில் ஈராக்கின் கிர்குர் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் 27 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் காயங்களுக்குள்ளாகினர்.
இது ஈராக் அரசாங்கம் இனிவரும் காலங்களில் எதிர் கொள்ள வேண்டிய கடும் சவால்களைக் குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது.
கடந்த ஆறு வருடங்கள் அமெரிக்கப் படைகள் செய்தவைகள் எல்லாம் முடிந்து போன நிலையில் தொடரும் ஈராக் அரசாங்கத்தையும் அதன் நடவடிக்கைகளையும் எதிர்காலமே தீர்மானிக்கும்.
02.07.2009


















Comments»
No comments yet — be the first.