வஸிரிஸ்தான் நோக்கி பாக்.இராணுவம் July 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.trackback
வஸிரிஸ்தானை நோக்கி அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அங்கிருந்து மக்களை வெளியேறுமாறும் பாக். அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள வஸிரிஸ்தானில் இருந்து பொது மக்கள் வெளியேறி வருகின்றனர்.
அப்பகுதியில் பதுங்கி இருக்கும் தலிபான்களை விரட்யடிப்பதற்காக இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாக். இராணுவத்தினருக்கும் தலிபான்களுக்குமிடையில் நடந்துவரும் சண்டையில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக அங்கு வசிக்கும் மக்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்து கொண்டிருக்கும்“ சண்டையால் 20 இலட்சம் வரையான மக்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறி பெஷாவர் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களைப் பாராமரிப்பதில் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வஸிரிஸ்தானிலும் நடவடிக்கையை தொடங்குவதற்காக இராணுவம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் செயற்பட்டு வரும் தலிபான்களின் தலைவர் பைதுல்லா மெசூத் வஸிரிஸ்தான் பிராந்தியத் தில் ஒளிந்திருப்பதாகவும் அவரைப் பிடிப்பதற்கான அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தாகவும் பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.
தற்போது சண்டைகள் நடைபெற்று வரும் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பிரதேசம் மீட்கப்பட்ட வஸிரிஸ்தானை நோக்கி இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் நடைபெறும் சண்டைகளினால் அங்கிருந்து தப்பியோடும் தலிபான்கள் வஸிரிஸ்தானில் மறைந்துள்ளனர் என்று இராணுவம் நம்புகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு மிகவும் அண்மை யிலுள்ள பாகிஸ்தானின் பகுதியான வஸிரிஸ்தான் மலைப்பாங்கான காடுகள் சார்ந்த பிரதேசமாகும். இங்கு தான் அல் கொய்தாவின் முக்கியஸ்தர்கள் பலரும் மறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் தலிபான்களின் முக்கிய தலைவரான பைதுல்லா மெசூத்தும் இங்கு மறைந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு சந்தேகிக்கின்றது.
முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவைக் கொலை செய்ய தற்கொலைப் போராளியை தயார் செய்தது பைதுல்லா மெசூத் என்றே சந்தேகிக்கப்படுகிறது. இது போன்ற பல காரணங்களால் வஸிரிஸ்தானை நோக்கிய இராணுவ நடவடிக்கை மிகமுக்கியம் வாய்ந்ததொன்றாகக் கருதப்படுகிறது. அத்துடன் தலிபான்கள் தஞ்சமடைந்துள்ள இறுதி இடமாகவும் வஸிரிஸ்தான் கருதப்படுகிறது. வஸிரிஸ்தான் வீழ்ச்சியானது உலகப் பயங்கரவாத அமைப்பான அல் கொய்தாவினதும் வீழ்ச்சிக்குச் சமமானது என்பதால் வெளிநாடுகள் இந்த இராணுவ நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வஸிரிஸ்தானை நோக்கிய இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் உயிரிழ ப்பை தவிர்க்கும் வகையில் விடுக்கப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்து 50ஆயிரம் வரையான மக்கள் அங்கிருந்து வெளியேறியிருக்கின்றனர். இவ்வாறான நிலையில் தலிபான்களின் முக்கிய தலைவர் பைதுல்லா மெசூதை தாக்கிப் பேசிய பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில் பைதுல்லா மெசூத் தங்கியிருக்கும் இடம் பற்றிய தகவல்களைத் தருவோருக்கு ஐந்து மில்லியன் டொலரை அமெரிக்கா சன்மானமாக அறிவித்துள்ளது.
பாரிய மலைகள், காடுகளுக்கு மத்தியில் பிரதான வீதிகளைத் தெரிவு செய்து வான்படைகளின் உதவியுடன் பாகிஸ் தான் இராணுவம் நகர்ந்து வருகிறது. இராணுவம் சந்தேகிக்கும் இடங்கள் மீது விமானத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தலிபான்கள் ஆப்கானிஸ்தானுக்குள் தப்பியோடுவதைத் தடை செய்யும் வகையில் எல்லைப்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியின் பெரும்பாலான பகுதிகள் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டமையைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள அணுவாயுதங்கள் தலிபான்களிடம் போகலாம் என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இதனையடுத்தே பாக். அரசு தலிபான்களுக்கெதிரான தாக்குதல்களை ஆரம்பித்தது. வடமேல் பிராந்திய தலிபான் ஆதரவு அமைப்புடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது முதல் நடத்தப்பட்டு வருகிற தாக்குதல்களில் இது வரை பெருமளவான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் தலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் இராணுவம் தோற்கடிக்கப்படும் என அல்கொய்தா தெரிவித்திருக்கிறது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் கிடைக்கும் வெற்றியே வஸிரிஸ்தானை நோக்கி இராணுவம் நகர உதவும் என்ற வகையில் ஆமை வேகத்தில் நகரும் இராணுவத்தினால் சாத்தியமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
26.06.2009


















Comments»
No comments yet — be the first.