அடக்குதலால் கிளர்ந்தெழுந்துள்ள சீனாவின் உய்குர் இனம் July 12, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.trackback
திபெத் போன்று போராட்டம் நடந்துவரும் இன்னுமொரு சுதந்திரத்துக்கான போராட்டம் பெரியளவில் வெளியில் வந்திருக்கிறது. சீனாவின் மேற்குப்புற மாகாணமான ஜின்சியாங் மாகாணத்தில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் உலகுக்கு மீண்டும் ஒரு சிறுபான்மையினருக்கெதிரான அடக்குதலை வெளிக் கொணர்ந்திருப்பதாகவே கொள்ள முடியும். சீனாவின் ஜின்சியாங் மாகாணத்திலுள்ள உய்குர் இன முஸ்லிம் அமைப்பினர் இந்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனை அடக்குவதற்கு சீன இராணுவம் மிக்க கடுமையாக முயன்று வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உய்குர் இன முஸ்லிம்கள் மிக நீண்ட காலமாகவே இப்பிராந்தியத்தில் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். இது வரலாற்றுக் காலந்தொட்டு கிழக்கு தெர்கிஸ்தான் என அழைக்கப்பட்டு வந்தது. சீனக் குடியரசு ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் சீன குடியரசு இராணுவம் ஜின்சியாங்கைக் கைப்பற்றின. அதன் பின்னர் ஹான் இனத்துக்கும் உய்கூர் இனத்துக்குமிடையிலான வேறுபாடுகள் அதிகரிக்க ஆரம்பித்தன.
தொழில், கல்வி, மற்றும் மத வழிபாட்டு விடயங்களில் இவர்கள் மீது கட்டுப்பாடுகள் ஆரம்பத்திலிருந்து பிரயோகிக்கப்பட்டு வந்தன. இப்போது நடந்துள்ள இந்தப் போராட்டம் புதிதானதல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகள் இற்த அமைப்பினருடைய போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. உரும்கி நகர் சீனாவின் தலைநகர் பீஜிங்கிலிருந்து மேற்காக 3270 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 23 இலட்சம் மக்கள் வசிக்கும் ஒரு பிரதேசமாகும்.
சுதந்திரமாகச் செயற்பட்டு வந்த ஜின்சியாங் மாகாணம் சீனக் குடியரசு ஏற்படுத்தப்பட்ட போது அடக்கப்பட முயன்றமையானது அவர்களுடைய சுதந்திரத்தைப் பறிப்பதாகவே உணரப்பட்டது. இதன் பிரதி பலிப்பாக போராட்டங்கள் வெடிக்கின்றன.
மத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பது வழிபாட்டில் ஈடுபடுவது போன்ற இஸ்லாமியர்களின் முக்கியமான விடயத்தில் கட்டுப்பாடுகள் விதித்தல், மற்றும் அவர்களது பிரதேசத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமை போன்ற காரணங்களால் எதிர்ப்புக்கள் உருவாகின. இவ்வாறான எதிர்ப்புக்கள் 1990ஆம் ஆண்டு, 1997ஆம் ஆண்டு என தொடர்ந்த வண்ணமே உள்ளன. உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.
கிழக்கு தெர்கிஸ்தன் இஸ்லாமிய இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புக்கள் ஜின்சியாங் பிராந்தியத்தில் தோன்றி செயற்பட்டன. ஆனால் அவற்றினை சீன அரசாங்கம் தடைசெய்ததுடன் இப்போது நாட்டுக்கு வெளியே இயங்கி வருகின்றன. புரட்சிகளை ஒடுக்குவதற்கான அத்தனை செயற்பாடுகளையும் சீன அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்பதற்கு இது முக்கியமான உதாரணமாக கொள்ளப்படுகிறது. இது தவிரவும் சில அமைப்புக்கள் சீனாவிற்கெதிராக வெளிநாடுகளிலிருந்து இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்ற நிலையில் பிரிவினைவாதம் மேலும் மேலும் வளர்ச்சியடையலாம். இதன் சர்வதேச மயப்படல் செயற்பாடுகள் இருப்பதாகவும் இதனை உலக உய்கூர் காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாகவும் சீனா குற்றஞ்சாட்டி வருகிறது. ஜேர்மனியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் இந்த அமைப்பின் தலைவி ரபீயா கதீர் இப்பொழுது அமெரிக்காவில் வசிப்பதாகத் தெரிகிறது.
அத்துடன் இப்போது நடைபெற்று வருகின்ற போõட்டத்திற்கு நாட்டுக்கு வெளியில் உள்ள அமைப்புகளின் உதவிகள் ஆதரவுகள் இருப்பதாகக் கொண்டால் அமெரிக்கா போன்ற வெளிநாட்டு அரசுகளின் பங்கு எப்படி இருக்கும் போன்ற கேள்விகள் சீனாவுக்கு எழத் தொடங்கியிருக்கின்றன.
அத்துடன் இந்தப் பிரச்சினைகள் உய்குர் முஸ்லிம் அமைப்புகள் இஸ்லாமிய இனத்தவருடன் சார்ந்து நடந்து வருகின்றன. அந்தவகையில் அல்கொய்தா போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகள் இருக்கலாமா என்றும் இப்போது சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன. அதற்கான சான்றுகளாக சர்வதேச மட்டத்தில் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றமையை சொல்லப்படுகிறது. அதற்கு உதாரணமாக பாகிஸ்தான் உய்குர் இனத் தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்டுகிறது.
சீனாவின் ஜின்சியாங் பிராந்தியத்தின் தலைநகர் உரும்கியில் தொடரும் வன்முறை காரணமாக சீன அதிகாரிகள் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பித்தார்கள். உள்ளூர் உய்குரிகளுக்கும் ஹான் சீனர்களுக்கும் இடையில் இந்த மோதல்கள் நடந்தன. ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இந்த வன்முறைகளில் இதுவரை 156க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். போராட்டங்கள் நடைபெறும் நகரின் இணைய தொடர்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உரும்கியின் தெருக்கள் அமைதியாக காணப்படுவதாக, அங்கே இருக்கும் சர்வதேச செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். நீண்ட கத்திகள், கம்புகள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தாங்கிய ஹான் சீன இன மக்கள் தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்றனர். முஸ்லிம் உய்குர் இனமக்களின் தாக்குதல்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் முகமாகவே இப்படி ஊர்வலமாக சென்றதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு போராட்டங்கள் நடைபெறுகின்ற நிலையில் சீனாவில் சிறுபான்மையினரைச் சரியாக இனங்கண்டு செயற்படுவதில் சீன அரசாங்கமம் கரிசனை காட்டவில்லை என்ற குறைபாடு இப்போது முன்வைக்கப்படுகிறது. திபெத்தைப் பொறுத்தவரை தாம் அங்கு சிறந்த வகையிலான அபிவிருத்தியைக் கொண்டு நடத்துவதாகவும் அங்கு மக்கள் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்கிறார்கள் என்று காண்பிக்க சீன அரசாங்கம் முயன்றாலும் அங்குள்ள பிரச்சினை கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அது போன்று உய்குர் இன முஸ்லிம்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அடக்குதல்களுக்கு எதிராகவே போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர் என்று கொள்ளலாம். சிறுபான்மையினருக்கான பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிகளில் சீன அரசாங்கம் ஈடுபடுவதே இப்போதைய தேவையாக உள்ளது.
உய்குர் இன மக்கள் தமது பிராந்தியத்தை தனியாகப் பிரித்துக் கொள்வதில் மும்முரம் காட்டுவதாகத் தெரியவில்லையாயினும் இவர்களுடைய நீண்டகால போராட்டமானது அதனைக் கொண்டு வந்துவிடலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. சீனாவின் ஜின்சியாங் பிராந்தியத்தில் தொடரும் வன்முறைகள் சரியாக அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை, தமது வழிபாட்டுத் தலங்கள் மீது கட்டுப்பாடு, மத சுதந்திரம் இல்லை, இராணுவம் நிரந்தரமாக இருத்தப்பட்டு பலமான பாதுகாப்பு, போன்ற காரணங்களால் ஏற்பட்டு வருகின்றன.
மொத்தமாக உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்சினையாக பார்க்கப்படும் உய்குர் இனத்தவர்களின் கலவரங்கள் பிரிவினைவாதம் இன்னும் இன்னும் தலைதூக்கும் நிலையைக் கொண்டு வருமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் உய்குர் இனத்தவர்களின் நடவடிக்கைகள் தலைமைகள் கண்டுபிடிக்கப்பட்டு திபெத் விவகாரம் போன்று அடக்கப்படுமா என்பது பொறுத்திருந்தே பார்க்ககப்பட வேண்டியது.
சீனாவின் குவான்டோங் மாகாணத்திலிருந்து ஆயிரம் மைலுக்கு அப்பாலுள்ள விளையாட்டுப் பொருட்கள் தொழிற்சாலை ஒன்றில் உய்கர் மற்றும் ஹான் சீனர்களிடையே இடம்பெற்ற மோதல் ஒன்று வன்முறைச் சம்பவங்களைத் தோற்றுவித்தன என்றுதான் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இருப்பினும் ஹான் இனத்தவர்களும் உய்குர் இனத்தவர்களும் தமது பாதுகாப்புக்காக வன்முறைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் 1500பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கும் படி கோரியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், சீனாவின் இயல்பு நிலையைப் பாதித்திருக்கும் இவ் வன்முறைச் சம்பவங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் சீன அரசும் உய்குர் இனமும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. நடைபெற்ற வன்முறைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பலியானவர்களில் 90 வீதமானவர்கள் உய்குர் அமைப்பினர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பெண்களே தமது கணவர்களை விடுவிக்கும் படி அதிகளவில் கலந்துகொள்கின்றனர். இதற்கிடையில் மத்திய ஆசியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அருகிலுள்ள கேந்திர முக்கியத்துவமான பிராந்தியத்தில் பாதுகாப்பு ஸ்திரமற்ற தன்மையை தோற்றுவிக்கும் முகமாக வெளிநாடுகளைச் சேர்ந்த கிளர்ச்சிக்காரர்களின் நாசகார வேலையாகவே இவ்வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாமென சீன அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில் தொடரும் போராட்டங்களுக்கு சொல்லப்படும் காரணங்களை விடுத்து தீர்வு முன்வைக்கப்படுவதும் அப்பிராந்திய அமைதியுமே இப்போது முக்கியமானதாக முன்நிறுத்தப்படுகிறது. சிறுபான்மை இனங்களின் அடக்குதல்கள் உலகளவில் தொடருகின்றன விடயமாகி விட்டநிலையில் அமைதி அடக்குதலால் சாத்தியமாகும் என்பதை மாத்திரமே நம்புவோமாக.
சீனாவில் நடைபெற்ற போராட்டம் காரணமாக ஜீ8 நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்ட சீன ஜனாதிபதி அவசரமாக நாடு திரும்பினார். இப்போராட்டத்திற்கு தீர்வை வழங்குவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
08.07.2009


















Comments»
No comments yet — be the first.