jump to navigation

ஈராக் ஊடகவியலாளர் விடுதலையில் மறைந்திருக்கும் உண்மை September 21, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
trackback

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் கலந்து கொண்ட வேளை அவர் மீது சப்பாத்து வீசிய ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி ஒன்பது மாத சிறைத் தண்டனையின் பின்னர் செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஈராக்கிற்கு விஜயம் செய்திருந்த வேளை ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார். இதில் கலந்து கொண்ட ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி, புஷ் மீது சப்பாத்துக்களை வீசினார். கைது செய்யப்பட்ட இவருக்கு ஈராக் நீதிமன்றம் மூன்று வருட சிறைத் தண்டனையை விதித்தது.

இத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்த போது ஒரு வருட சிறைத் தண்டனையாக அது குறைக்கப்பட்டது.. அவருடைய சிறை நடத்தை காரணமாக ஒன்பது மாதகாலத்தில் விடுவிக்கப்பட்டார்.

முன்நடார் அல் செய்திக்கு புஷ்மீது சப் பாத்துக்களை வீசியமைக்காக அரபு நாடு களிலிருந்து ஏராளமான பரிசுப் பொருட்களும் வாழ்த்துக்களும் வந்து சேர்ந்தன. அராபிய செல்வந்தக் குடும்பங்களில் இவருக்கு பெண் கொடுக்கவும் ஏராளமானோர் முன் வந்தனர். கோடிக் கணக்கில் இவருக்கு கிடைத்துள்ள பரிசுப் பொருட்கள் நிதிகளை ஈராக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பங்கிடவுள்ளதாகவும் அநாதைகள் பராமரிப்பு இல்லமொன்றை நடத்தப் போவதாகவும் முன்நடார் அல் செய்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க உளவுத்துறையால் தனது வாழ்க்கைக்கு ஆபத்து இருக்கிறது என்கிறார் முன்நடார் அல் செய்தி. சிறையிலடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் கடும் சித்திரவதைக்குள்ளானதாக தெரிவித்துள்ள முன்நடார் அல் செய்தி விடுதலையான பின்னரும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளாளார்.

விடுதலையாகி வந்த முன்நடார் அல் செய்திக்கு ஈராக்கில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இதன் போது நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தான் சிறையில் எதிர்கொண்ட இன்னல்கள் கொடுமைகள் பற்றி விளக்கியிருக்கிறார் முன்நடார் அல் செய்தி.
குளிர்ந்த நீரில் அமிழ்த்தப்பபட்டு வைக்கப்பட்டதுடன் மின்சாரத் தாக்குதலுக்குள்ளானதாகவும் சவுக்கினால் மிகப் பலமாக அடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். செருப்பு வீசியமைக்காக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் இந்தத் தடவை அவருக்கான தண்டனைக்காலம் முடிவடைந்து விட்டாலும் அரசுக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியதாக தன்மீது அமெ ரிக்காவின் உளவுத்துறை போலிக் குற்றங்களைச் சுமத்த வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார்.

எனவே இதனால் எனது விடுதலை எனக்கு சுதந்திரத்தையளித்துள்ளதாக நினைக்க முடியாத விடுவிப்பாக நினைக்கும் ஈராக்கிய ஊடகவியலாளர் எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம். என்ற அச்சத்துடன் காணப்படுகிறார்.

சிறையில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துவிட்டு வெளியில் வந்திருக்கும் முன்நடார் தன்னைக் கொடுமைப்படுத்திய ஈராக் இராணுவ அதிகாரிகளை தேவையேற்படும்போது அவர்களின் பெயர்கள் அடங்கலாக தெரியப்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.
ஈராக்கினுள் அமெரிக்க இராணுவம் உள்நுழைந்து செய்து வந்த அட்டகாசங்கள் ஒழிந்து விட்டன என்று சொல்வதற்கு சந்தர்ப்பம் இல்லை. இதற்கு ஈராக்கின் ஊடகவியலாளரின் கருத்துகள் நல்ல உதாரணமாகும்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ் ஆரம்பித்து வைத்த ஈராக் யுத்தம் ஒபாமா ஆட்சிக்கு வந்த பின்னரும் முடிந்து விடுவதாகத் தெரியவில்லை. இதற்கு தினமும் அங்கு நடந்த வண்ணமிருக்கிற குண்டுத் தாக்குதல்கள் உதாரணமாகும்.

மிகக் கொடுமையான அழிவுகளைச் சந்தித்துவிட்ட ஈராக்கிய வரலாறில் அமெரிக்காவின் கொடுமைகள் மறக்க முடியாதவை என்று ஈராக்கிய மக்கள் கவலை கொள்கின்றனர். இருப்பினும் அரபு நாடுகளின் மீது ஆக்கிரமிப்புக்களைச் செய்து வரும் அமெரிக்காவுக்கு எதிராக அல் கொய்தா அமைப்பினரும் அதன் கூட்டணியினரும் நடத்துகின்ற போராட்டங்களுக்கு நீண்டகாலத்திலாவது பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனையோ வேண்டத்தகாத நிலைமைகளை அனுபவித்துவிட்ட பின்னரும் அரபு நாடுகளைத் தமக்கு அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
அதிகாரத்திலுள்ளவரை நடக்கிற அட்டகாசங்கள் போராட்டங்களால் கட்டுப்படுத்தப்படலாம் என்பதற்கு அமெரிக்காவின் செயற்பாடுகளும் அதற்கெதிராக நடந்து வருகின்றன அல் கொய்தாவின் போராட்டங்களுமே உதாரணமாகும்.

புஷ்ஷினுடைய நடத்தைகளுக்கு பல தடவைகளில் கொடுக்கப்பட்ட பதிலடிகள் கொடுக்கப்படும் தண்டனைகளால் மறைக்கப்பட்டு விடாது என்பதனையே ஈராக்கின் ஊடகவியலாளர் கைதும் அவரது விடுதலையும் காட்டி நிற்கிறது.   
17.09.09

Comments»

1. ஈராக் ஊடகவியலாளர் விடுதலையில் மறைந்திருக்கும் உண்மை « எங்கள் தமிழ்! - September 22, 2009

[...] செப்டம்பர்22, 2009 at 11:10 காலை | In TAMIL | Leave a Comment அதிரன் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி [...]