jump to navigation

சத்துருக்கொண்டான் படுகொலையின் 19ஆவது நினைவு October 6, 2009

Posted by Athiran in சிவராம், செய்திகள், தொகுப்புகள், புகைப்படங்கள்.
Tags: , , , , , ,
add a comment

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினப் படங்களை எனக்கு இப்போதுதான் பதிவேற்றம் செய்யமுடிகிறது என்பதற்குக் கவலை கொள்கிறேன். சத்துருக்கொண்டான் படுகொலை என்றவுடன் எனக்கு அந்தப் படுகொலை குறித்து ஞாபகம் வருகிறதோ இல்லையோ என்னுடைய பத்திரிகைத்துறை ஆசிரியர் அனைவராலும் தராக்கி என அழைக்கப்படுகிற சிவாராம் பற்றியே ஞாபகம் வரும்.

DSCN0466

நான் மட்டக்களப்பில் தினக்கதிர் பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளனாக வேலை செய்து கொண்டிருந்த வேளை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசிப் பகுதியில் ( திகதி சரியாக ஞாபகத்தில் இல்லை) தினக்கதிரின் ஆசிரியராக இருந்த றுசாங்கன் அண்ணா ஒரு வாரமளவில் கொழும்புக்குச் சென்றிருந்தார். அப்போது சிவராம் என்னை அழைத்து சத்துருக்கொண்டான் படுகொலை பத்தாவது ஆண்டு வருது அது பற்றி ஒரு கட்டுரை எழுது என்று சொன்னார்.

அன்றைய நாளே சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்துருக்கொண்டான் புறப்பட்டேன். அப்போது எனக்கு சத்துருக் கொண்டான் படுகொலை என்பது ஒன்று நடந்ததாக மட்டுமே தெரியும். ஆனாலும் எனக்கிருந்த துடிப்பு அதைப் பற்றி முழுதாக எழுதி விட வேண்டும் என்று தூண்டி விட்டது. என்பதை விடவும் அவர் (சிவாராம் என்று அவருடைய பெயரை மரியாதை கருதி அடிக்கடி உச்சரிப்பதில் எனக்கு இஸ்டமில்லை என்பதால் அவர் என்று குறிப்பிடுகிறேன்) சொல்லியது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது.

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாளான 09.09.க்கு முதல் நாள் நான் எழுதிய கட்டுரை பக்க வடிவமைப்பு முடிந்த வேளை அதனை வாசித்துப்பார்த்த அவர் இன்னமும் போதாது மீண்டும் அங்கு போய் தகவல் திரட்டு என திரும்பவும் சத்துருக்கொண்டான் அனுப்பினார்.

றுசாங்கன் அண்ணா வரும் வரை தினக்கதிரின் பிரதான வேலைகளை அவரே பொறுப்பேற்று நடத்தினார். அந்த குறிப்பிட்ட நாட்களில் எங்களுக்கு அவர் பல விடயங்களை கற்றுத் தந்தார்.

அது போல அவர் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வரும் போதெல்லாம் எங்களுடைய தினக்கதிர் அலுவலகத்திற்கு வருவது வழக்கம்.

அவருடைய பக்குவப்படுத்தல்கள் உண்மையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு பத்திரிகையாளனை உருவாக்குவார் என்பதனைக் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. ஊக்கப்படுத்துவதும் கற்றுக் கொடுப்பதும் ஒரு பத்திரிகை ஆசிரியரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

சத்துருக்கொண்டான் படுகொலை போல பல விடயங்கள் அவருடன் இணைந்து செய்யப்பட்டிருந்தாலும் அவருடைய நினைவுகள் மீட்கும் போது சத்துருக் கொண்டான் படுகொலை வந்து விடுகிறது.

சிவராம் பற்றி அவருடைய மறுபக்கம் பற்றித் தெரிந்தவர்கள் முன்வைக்கி்ன்ற விவாதங்கள் எனக்கு இரண்டாம் பட்சமானவை எனக்குத் தெரிந்தவகையில் ஒரு பத்திரிகைக்காரனாகவே அவரைத் தெரிந்து கொண்டேன். அவ்வாறு இறந்தும் போனார் நினைத்துப் பார்க்கையில் நிச்சயமாக அவருடைய நினைவுகள் நிசப்தமாகா நிஜங்களாகவே இருக்கின்றன.

மிகுதிப்படங்களைப் பார்க்க

(more…)

சிவராமுக்குப் பிறந்தநாள். August 11, 2008

Posted by Athiran in சிவராம்.
Tags: , , , , , , , ,
1 comment so far

சிவராம் என்ற மாபெரும் பத்திரிகையாளனின் பிறந்ததினம் இன்றாகும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பித்தவர்கள் மிகச் சில பேரே உள்ளனர். அவற்றில் மாமனிதர் சிவராமும் ஒருவர்.
தமிழ் தேசியம் என்ற விடயத்துக்கள் சென்று தன்னால் முடிந்தவரை அவர் பலவற்றைக் காட்டித் தள்ளிவிட்டச் சென்றிருக்கிறார். அவற்றினை நியாய பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாதவர்களும் இருக்கிறார்கள்.
அவரது வாழ்க்கை வரலாற்றை பலருக்குப் படிக்கக் கொடுக்கும் முயற்சியை யாரும் செய்யவும் இல்லை. அவரது படைப்புகளை பிரசுரத்துக்கு உட்படுத்தவும் இல்லை. அதனைச் செய்து அவரது கருத்துக்கள் வெளியில் வர பலரும் உழைக்க வேண்டும்.
துமிழ் பத்திரிகை உலகம் சிவராம் என்ற தராகியை மற்ந்து விடுவதானது அவருக்குச் செய்யும் துரோகங்களில் ஒன்றாக இருக்கும்.

சிறு குழந்தைகளின் கண்ணீர் துளிகள் July 21, 2008

Posted by Athiran in சிவராம்.
Tags: , , , , , , , , , , , , ,
add a comment

காலத்தின் நீள் இருக்கைகளில்
வெறுமையுற்றியிருக்கும்
பொழுதுகள்
சாம்பல் மேடாகும் வாழ்வின்
ஆதாரங்கள்
மீட்சி பெற முடியாத
ஒரு கால தருணத்தில்
நீயும் கடப்பட்டு இறந்து
போனாய்…

கொடூரமான
வன்முறைகளுடன்
வாழநேர்ந்த நிர்பந்தங்கள்
உன்னத இலட்சியத்திற்காக
வாழ்ந்து உயர்ந்த
மனிதர்களை சாவு
அழித்து விடுவதில்லை…..

தராக்கி
போன்ற மாமனிதர்களின்
சாவு
மரணத்தின் சுவடுகளை
அழித்து எழுந்து நிற்கிறது.

ஏமாற்றமும்
வஞ்சகங்களும்
தந்திரங்களும்
துரோகங்களும்
தமிழ் இனத்தின் வேர்களை
அழித்துவிட போவதில்லை…

நம்
ஈழத்தின் பெறுமதியான
அழகிய கனவுகள்
சுக்கு நு}றாக்கப்படுகின்றன.

ஒரு தாராக்கியன்
உயிருக்கு முன்
ஆயிரம் தராக்கிகள்
பிறப்பார்கள்…

ஆக….
நடக்கும் எல்லா
அதிகாரங்களிலும்
வன்முறை கைகொண்டு
எதிர்ப்புணர்வின் கால்களுக்கு
பின்
சிறு குழந்தைகளின்
கண்ணீர் துளிகளின்
அலறல் கேட்டபடி
இருக்கின்றனது…!

ஆற்றாமையின்
கணங்களின் உள் தள்ளும்
மனித படுகொலையின்
பட்டியலை நியாயப்பாடுகளின்
பழி நாளைய
போரின் துயரத்தின் முன்
முடிவடையலாம்.

தலையில்
உட்புறத்தில்
சரிந்த துப்பாக்கி குண்டின்
இரத்தம் தோய்ந்த
இறுதி நினைவின்
மரணத்தின் போது
இருளினு}டாக
நீ மறுபடியும் ஒளியாய்
பிறப்பாய் தராக்கி….

நீ
ஒரு யுகத்தின்
விடியலுக்காக
விதைக்கப் பட்டிருக்கிறாய்….
மறுபடியும்

நீ
எங்கள் முன்
தோன்றுவாய்….

தமிழ்ச் சமூகத்தின் மிகச் சிறந்த ஊடகவியலாளராகக் கருதப்பட்ட சிவராம் சமீபத்தில் இலங்கையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இராணுவ புலனாய் ஆய்வியலாளர் என்ற நிபுணத்துவ மதிப்பீடு செய்யப்பட்டவர் சிவராம்.

புதிய காற்று ஆக 2005    மதுரை

அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய தினக்குரல் சிவராமுக்கு எழுதியதும் அவரது பதிலும். July 10, 2008

Posted by Athiran in சிவராம்.
Tags: , , , , , , , , , ,
add a comment
தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்
26 October 2004
மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சிங்கள மக்களுக்கு விளங்க வைக்க வேண்டுமென்பதில் விடுதலைப்புலிகள் அண்மைக் காலமாக அக்கறை காட்டி வருகிறார்கள். இந்த நோக்கத்திற்காக ஓரிரு வருடங்களுக்கு முன்னர் வன்னியில் இருந்து ‘தேதுன்ன” என்ற பத்திரிகையையும் அவர்கள் வெளியிட ஆரம்பித்தனர். (more…)

அந்தரத்தில் தொங்கும் இலங்கையின் படை வலுச் சமநிலை June 13, 2008

Posted by Athiran in சிவராம்.
Tags: , , , , ,
add a comment

கடற்புலிகளை வாகரைக்கு வராமல் ஸ்ரீலங்கா அரசு தடுத்திருந்தால் கருணா மட்டக்களப்பை விட்டு ஓடவேண்டி வந்திருக்காது எனவும் வாகரைப் பகுதியிலிருந்து வாழைச்சேனை, பொலன்னறுவை நெடுஞ்சாலையைக் கடந்து செல்வதற்கு ரமேன் கீழ் வந்த படைகளை அனுமதிக்காமல் ஸ்ரீலங்கா படையினர் தடுத்து நிறுத்தியிருந்தால் கருணாவை அசைத்திருக்க முடியாது எனவும் ஒரு சிலர் இன்னும் நம்புகின்றனர். ஸ்ரீலங்கா அரசு வெளிப்படையாக கருணா விவகாரத்தில் ஏன் தலையிடத் தயங்கியது என்பதும் அந்த காலகட்டத்தில் ஏன் சில மேற்கு நாட்டுத் துதுவர்கள் கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளுக்குரிய அங்கீகாரத்தை தொடர்ந்து வழங்க முற்பட்டனர் என்பதும் சிலருக்கு இன்னும் கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு பெரியதொரு இலஞ்சத் தொகையைக் கொடுத்ததாலேயே அவர்களுடைய சண்டைப் படகுகள் வாகரை செல்ல அனுமதிக்கப்பட்டன என்று வெளிநாட்டுப் புலனாய்வுத் துறையொன்றின் பின்னணியோடு இயங்கும் ‘ஏசியன் டிரிபியோன்’ இணையச் சஞ்சிகை குற்றஞ்சாட்டுமளவுக்கு மேற்படி விடயத்தில் புலிகளின் சில தமிழ் எதிரிகளும் சிங்களப் பேரினவாதிகளும் குழம்பிப்போய் இருக்கிறார்கள்.
இவர்கள் குழம்புவதாலோ கலங்குவதாலோ யாருக்கும் நட்டமில்லை. ஆனால், எமது மக்களிடையே ஆங்காங்கு காணப்படும் சில எருமைகள் இப்படியான கேள்விகளை இன்னும் தொடுத்து வருகின்றன. எனவேதான் கருணாவின் பிரச்சினையின்போது ஏன் ஸ்ரீலங்கா அரசு வெளிப்படையா தலையிடத் தயங்கியது என்பதை நாம் இங்கு ஆராயவேண்டியுள்ளது.
இதற்கு அடிப்படையாக நாம் படைவலுச் சமநிலை (Military Balance) என்ற போரியல் கருத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையின் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்படி படைவலுச் சமநிலையிலேயே தங்கியுள்ளது எனவும் விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்குமிடையே 2001 ஆம் ஆண்டளவில் படை வலுச் சமநிலை ஒன்று ஏற்பட்டதனாலேயே இரு தரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்வந்தன எனவும் ஈழப்போர்களை ஆராய்ந்து வரும் மேலைத்தேய போரியல் அறிஞர் சிலர் கூறுவர்.
இதையே இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் தனது அடிப்படை விளக்கக் கோட்பாடாக கொண்டு இயங்கி வருகிறது. இருநாடுகளுக்கிடையில் படைவலுச் சமநிலை ஏற்பட்டால் அவை தம்மிடையே போரிடுவதை தவிர்த்துக் கொள்ளும் என நவீன போரியலின் முன்தடுப்புக் கோட்பாடு (Deterrence Theory) கூறுகின்றது. மேற்படி கோட்பாடு இரண்டாம் உலகப்போரின் பின்னர் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் நிலவிய உலகளாவிய பனிப்போரின் (Cold War) இராணுவப் பரிமாணத்தை விளக்க உருவாக்கப்பட்டதொன்றாகும். சோவியத் யூனியனிடமிருந்த அணுவாயுதங்களின் எண்ணிக்கை காரணமாகவே அமெரிக்கா அதன்மீது போர் தொடுக்காமல் இருந்ததென்றும் அதேபோல அமெரிக்காவின் அணுவாயுதக் களஞ்சியத்தின் காரணமாகவே சோவியத் யூனியன் மூன்றாம் உலகப் போரை துண்டிவிடாமல் இருந்தது எனவும் முன் தடுப்புக் கோட்பாட்டாளர்கள் கூறினர். இதன் காரணமாகவே அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஏட்டிக்குப் போட்டியாகத் தத்தமது அணுவாயுதக் களஞ்சியங்களை பெருக்கி உலக படை வலுச் சமநிலையை தமக்குச் சாதகமாக திருப்பமுயன்று வந்தன.
படைவலுச் சமநிலை இரு தரப்பினரிடையே காணப்படும்போது அவர்கள் தம்மிடையே போரிடுவதால் ஏற்படும் சமனான அழிவை கருத்திற்கொண்டு நிரந்தரமான அமைதி காக்கவே விரும்புவர் என்ற அடிப்படையில் போரியல் அறிஞர்கள் பல்வேறு நாடுகளுக்கிடையிலான படைவலுச் சமநிலையை காலத்துக்குக் காலம் அளவிட்டு மதிப்பீடு செய்து வருகின்றனர். இங்கிலாந்திலுள்ள சர்வதேச கேந்திரக் கற்கைகளுக்கான நிறுவனம் ஆண்டுதோறும் உலக நாடுகளின் படைவலுச் சமநிலைகளை கணிப்பிட்டு இராணுவச் சமநிலை (Military Balance) என்கின்ற ஒரு ஆய்வு நு}லை வெளியிட்டு வருகின்றது.இரு நாடுகளுக்கிடையிலான படை வலுச் சமநிலையை நாம் அவற்றிடம் இருக்கும் அணுவாயுத ஏவுகணைகள், பீரங்கிகள், டாங்கிகள், படையணிகள், போர்க் கப்பல்கள், குண்டு வீச்சு விமானங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு கணிப்பிடலாம். ஆனால் எந்த அடிப்படையில் நாம் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்குமிடையில் இராணுவச் சமநிலை உள்ளதெனக் கூறமுடியும்?ஸ்ரீலங்காவின் படைவலுவை அளவிடலாம். நாம் முன்னர் குறிப்பிட்ட இராணுவச் சமநிலை போரியல் ஆய்வு வெளியீடும் ஜேன்ஸ் (Janes) போன்ற வேறு சர்வதேச படைத்துறை வெளியீடுகளும் ஆண்டுதோறும் ஸ்ரீலங்காவின் படைவலுவை மதிப்பிட்டு வருகின்றன.
ஆனால் புலிகளின் உண்மையான படைவலு என்ன என்பது யாருக்கும் திட்டவட்டமாகத் தெரியாது. எனவே தான் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையில் படைவலுச் சமநிலை உள்ளது நாம் எந்த அடிப்படையில் கூறமுடியும் என்ற கேள்வி எழுகிறது.
இதைப்பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் நாம் ஸ்ரீலங்கா படைகளின் வலு என்ன என்பதைப் பார்ப்போம்.மேலைத்தேய படைக் கட்டமைப்பு முறையின் கீழ் ஒரு நாட்டின் படையில் மிகப்பெரிய அலகு ஒரு கோ (Corp) ஆகும். இதற்கு அடுத்த அளவிலுள்ளது ஒரு டிவிசன் (Division). ஆதற்கடுத்தது பிரிகேட் (Brigade). இவ்வாறு ‘செக்~ன்’ வரை அலகுகள் சிறிதாகிச் செல்லும். ஓவ்வொரு அலகின் அளவும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. (நாடுகளுக்கிடையில் பெரும்போர்கள் நடைபெறும்போது இரண்டு அல்லது மூன்று கோக்களை இணைத்து ஒரு படை – Army உருவாக்கப்படுகின்றது.
ஒரு Army இற்கு கட்டளைத் தளபதியாக Field Marshall தரத்திலுள்ளவரே நியமிக்கப்படுவார்.) ஸ்ரீலங்காப் படைகளின் மிகப்பெரிய அலகாக டிவிசனே காணப்படுகிறது. இலங்கை பின்பற்றிய பிரித்தானியப் படைக்கட்டமைப்பு முறையின் கீழ் ஒரு டிவிசனில் அண்ணளவாக 8 ஆயிரம் படையாட்கள் இருக்கவேண்டும். ஒரு டிவிசனில் வழமையாக மூன்று பிரிகேட் அணிகள் காணப்படும். ஸ்ரீலங்கா படைகளில் களத்தில் இறக்கப்படக் கூடிய டிவிசன்களாக 21, 22, 23, 51, 52, 53, 54, 55, 56 என்பவை காணப்படுகின்றன. இருபது ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போரில் ஈடுபட்டு வந்ததாலும் தொடர்ச்சியாக படைகளிலிருந்து படையாட்கள் ஓடியதாலும் மேற்படி டிவிசன்களின் அளவு சுருங்கியே காணப்படுகின்றது. உதாரணமாக ஆனையிறவை புலிகள் தாக்கிய பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய 54 ஆவது டிவிசன் ஆயிரத்துக்குக் குறைந்த படையாட்களுடனேயே காணப்பட்டது. (இது தற்போது மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.) இதுபோல விசேட படைகள், கமாண்டோக்கள் ஆகியவற்றாலான 53 டிவிசனும் புலிகளிடம் தொடர்ந்து அடிவாங்கியதாலும் படையாட்கள் ஓடியதாலும் அளவில் மிகச் சுருங்கியே காணப்படுகின்றது.இருநாடுகளுக்கிடையிலான படைவலுச் சமநிலை என்பது அவற்றின் பீரங்கிகள், படையணிகள் போன்றவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் நாம் மதிப்பிட முடியாது. ஆவை எவ்வாறு எதிரியை நோக்கி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன என்பதும் படைவலுச்சமநிலையை ஆராய்வதற்கு முக்கிய அடிப்படையாகிறது.உதாரணமாக, இந்தியா தனது படைவலுவின் பெரும்பகுதியை தமிழ்நாட்டில் குவித்து வைத்திருக்கின்றது என எடுத்துக்கொள்வோம். இந்த நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் படைவலுச் சமநிலை உள்ளது. என நாம் கூறமுடியாது. ஏன்? பாகிஸ்தானுக்குச் சமனான அல்லது கூடிய படைவலு இந்தியாவிடம் இருந்தபோதும் அது பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர் ஆகிய எல்லைப்புறங்களை நோக்கிய நிலையில் இல்லாவிடின் அங்கு பாகிஸ்தானின் கையே சமநிலையில் மேலோங்கிக் காணப்படும். புடைகளை உரிய இடத்தில் நகர்த்தி வைத்திராவிட்டால் ஒரு நாட்டிடம் எவ்வளவு படைவலு இருப்பினும் அது தன்னைவிட பலம் குறைந்த ஒரு எதிரியை எதிர்கொள்ள முடியாது போய்விடும். எனவேதான் இருநாடுகளுக்கிடையில் காணப்படும் படைவலு மட்டுமல்லாது அப்படைவலு எவ்வாறு எதிரியை நோக்கி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது என்பதும் அவற்றுக்கு இடையிலான படைவலுச் சமநிலையை கணிக்க தேவையாகிறது.இந்தவகையில், ஸ்ரீலங்கா அரசுக்கும் புலிகளுக்குமிடையில் படைவலுச் சமநிலை உள்ளது என கூறும்போது முதலில் நாம் ஸ்ரீலங்கா அரசு எவ்வாறு தன் படையணிகளை புலிகளை நோக்கி அணி வகுத்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.வடக்குத் தெற்காக முகமாலை, ஓமந்தை ஆகியவற்றுக்கிடையிலும் கிழக்கு மேற்காக முல்லைத்தீவு, மன்னார் ஆகியவற்றின் கரையோரங்களுக்கிடையிலும் அமைந்துள்ள பெரும் நிலப்பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதைச்சுற்றி இதன் வடபாகத்தில் 51, 52, 54 ஆகிய டிவிசன்களும் 55 இ;ன் ஒரு பகுதியும் இதன் தென்பாகத்தில் மன்னாரிலிருந்து மணலாறுவரை 21, 56 மற்றும் 22 டிவிசனின் ஒரு பகுதியும் நிலைகொண்டுள்ளன. இவற்றோடு இந்த டிவிசன்களுக்குரிய ஆதரவணிகளாக பீரங்கி, கவசவாகன மற்றும் வழங்கல் போன்ற பல பிரிவுகளும் உள்ளன. இவற்றோடு 53 டிவிசனும் வடக்கை நோக்கியதாகவே உள்ளது.கிழக்கில் மணலாறுக்குத் தெற்காக திருமலையில் 22 டிவிசனின் ஒரு பகுதியும் மட்டக்களப்பு வடக்கு அதன் பின்புலமான மின்னேரியா ஆகிய பகுதிகளில் 23 டிவிசனும் அண்மைக்காலத்தில் 55 டிவிசனின் ஒரு பகுதியும் நிலை கொண்டுள்ளன. (நீங்கள் சில இடங்களில் ஸ்ரீலங்கா படைமுகாம்கள் 23-2 அல்லது 51 -2 போன்ற இலக்கங்களைக் கண்டிருப்பீர்கள். இதில் முன்பகுதி டிவிசனையும் பின்பகுதி அதன் பிரிகேட் இலக்கத்தையும் குறிப்பிடுகின்றன.) இதைப் பார்க்கும்போது உங்களுக்கு விளங்குவது என்ன?அதாவது, வடக்கில் புலிகள் கட்டுப்படுத்தும் பகுதியை நோக்கி ஸ்ரீலங்கா அரசு தனது ஒன்பது களமிறக்கக் கூடிய டிவிசன்களில் ஏழு டிவிசன்களை ஒழுங்குபடுத்தியுள்ளது என்ற உண்மை அடிப்படைக் கணக்குத் தெரிந்த யாருக்கும் இலகுவாகப் புரியும். இதன் காரணம் என்ன? 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கில் தன்னிடமிருந்த படைவலுவின் சாரத்தை ஒன்றுதிரட்டி முகமாலையிலிருந்து பளையைநோக்கி ஸ்ரீலங்கா இராணுவம் தீச்சுவாலை நடவடிக்கையை மேற்கொண்டது. இதை முறியடித்த அதேவேளை வடக்கின் வேறு எந்த முனையிலிருந்தும் ஸ்ரீலங்காப் படையினர் சமகாலத்தில் வேறு தாக்குதலை தொடுக்கமுடியாதபடி தடுக்குமளவிற்கு புலிகளின் படைபலம் காணப்பட்டது. வடக்கில் இருதரப்பிற்குமிடையில் படைவலுச் சமநிலை ஏற்பட்டுவிட்டதையே இது காட்டிற்று. அதாவது ஸ்ரீலங்காப் படைகளின் ஏழரை டிவிசன்களுக்கு (அந்நேரத்தில் 55 டிவிசன் முழுமையாக வடக்கிலேயே இருந்தது) சமனான படைவலு புலிகளிடம் காணப்பட்டதாலேயே மேற்படி நிலை தோன்றிற்று. இன்னொரு வகையில் சொல்லப்போனால் ஸ்ரீலங்காப் படைகளின் 83 சதவீத வலுவிற்குச் சமனான பலம் வன்னியில் புலிகளிடம் உள்ளது என்பதையே தீச்சுவாலை நடவடிக்கையின் தோல்வி மிகத் தெளிவாகக் காட்டிற்று. இதை இந்திய, பிரித்தானிய மற்றும் அமெரிக்க போரியல் அறிஞர்கள் மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டனர்.இலங்கையில் இவ்வாறாகத் தோன்றிய படைவலுச் சமநிலை புலிகளின் பக்கம் சரியப்போகிறது என்பது கட்டுநாயக்க வான்படைத் தளத்திற்கு விழுந்த அடியோடு ஸ்ரீலங்கா அரசின் பின்னின்ற நாடுகளுக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. இந்தப் படைவலுச் சமநிலையை புலிகளுக்குச் சார்பாக தளம்பவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஸ்ரீலங்கா அரசுக்கும் அதற்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்த நாடுகளுக்கும் 2001 ஏப்ரலுக்குப் பின்னர் ஏற்பட்டது. இலங்கையின் படைவலுச் சமநிலை புலிகளுக்குச் சார்பாக சரிந்தால் இத்தீவின் இராணுவ மேலாண்மை அவர்களின் கைக்குப் போய்விடும் எனவும் அப்படிப்போனால் இங்கு தாம் எண்ணியதை செய்யமுடியாதளவிற்கு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்றுணிவு அற்றுப்போகும் எனவும் அந்நாடுகள் எண்ணின.அதுமட்டுமன்றி, இப்படைவலுச் சமநிலையில் புலிகளின் தரப்பு இராணுவ வளங்களில் சிலவற்றை தம்மால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்த முடியாது என்பதையும் அந்நாடுகள் உணர்ந்தன. புலிகளிடம் எத்தனை பீரங்கிகள் உள்ளன, டிவிசன்கள் உள்ளன, சண்டைப் படகுகள் உள்ளன என்பதுபோன்ற விடயங்கள் சமச்சீரான படைவலு சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைக் கொண்டு சமநிலையைக் கணிப்பிடுவது இலகுவாகும். ஆனால், புலிகளிடம் காணப்படும் கரும்புலிப்படையும் கொழும்பைத் தாக்கும் வலுவும் சமச்சீரற்றவையாகவும் (Asymmetrical) அதனால் சரியாக அளவிடப்படமுடியாதவையாகவும் காணப்படுகின்றது. உதாரணமாக ஒரு பீரங்கியால் எத்தனை முறை சுடமுடியும் என்பதை கணக்கிடலாம். ஆனால், ஒரு கரும்புலி அணியின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பதை அளவிடமுடியாது. ஆகவே, இலங்கையில் ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் இன்று நிலவும் படைவலுச் சமநிலையில் கரும்புலிகளும் புலிகளின் கொழும்பைத் தாக்கும் வலுவும் அளவிடமுடியாத அம்சங்களாக இருப்பதும் வெளிநாடுகளுக்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்றன. இதனாலேயே புலிகளை பேச்சுவார்த்தை என்ற கூட்டுக்குள் நிரந்தரமாக மடக்கி வைத்திருக்க அவை முயற்சி எடுக்கின்றன.இனித் தொடங்கிய இடத்துக்கு வருவோம். கருணாமீது மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையில் ஸ்ரீலங்காப் படையினர் தலையிட்டால் மறுபேச்சுக்கு இடமின்றி அடிவிழும் என்பது சந்திரிகா அரசுக்கு அந்நேரத்தில் மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தது. சண்டை மீண்டும் ஆரம்பித்தால் வடக்கில் இருதரப்புக்குமிடையிலான படைவலுச் சமநிலையை பேணமுடியாது என்பது சந்திரிகா அரசுக்கும் ஸ்ரீலங்காப் படைத்தளபதிகளுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. வடக்கில் உள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஏழு டிவிசன்களில் பெரும்பாலானவை போர் மூளும்போது பாதிப்புக்குள்ளாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். வடக்கில் உள்ள டிவிசன்களுக்கு ஏற்படக்கூடிய சிறிய பாதிப்பும் இலங்கையின் படைவலுச் சமநிலையை புலிகளுக்குச் சார்பாக சரித்துவிடும் என்பது கிழக்கிலுள்ள சில போரியல் பேதைகளுக்கு புரியாவிட்டாலும் ஸ்ரீலங்கா படைத்தளபதிகளுக்கும் வெளிநாட்டு படைத்துறை வல்லுநர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.இதைவிட இன்னொரு முக்கிய விடயத்தையும் அவர்கள் கருத்திற்கொள்ள வேண்டியிருந்தது. உங்களை ஒருவர் திடீரெனத் தாக்கவந்தால் நீங்கள் முதலில் உங்கள் உடம்பில் படக்கூடாத இடங்களில் அடிவிழாமல் தடுக்கவே முயற்சிப்பீர்கள். அதுபோலவே ஒருநாட்டின்மீது இன்னொரு நாடு போர் தொடுக்க முற்பட்டால் முதலாவது நாடு தன்னுடைய கேந்திர மற்றும் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் காப்பாற்றும் வகையிலேயே தன்னுடைய படைவளங்களை பிரித்துக் குவிக்க முற்படும். ஊதாரணமாக இந்தியா மீது பாகிஸ்தான் போர்தொடுத்தால் இந்தியா தனது படைவளங்களைக் கொண்டு போய் முதலில் தமிழ்நாட்டில் குவிக்காது. அது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப்புற பகுதிகளை நோக்கியே தனது படைகளை நகர்த்தும்.போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர் புலிகள் தமது படைகளை வடமுனை, மேற்குமுனை, கிழக்கு முனை, தென்கிழக்குமுனை ஆகிய கட்டளைத் தலைமையகங்களின் கீழ் மறுசீரமைத்திருக்கிறார்கள். புலிகளின் மேற்குமுனைப் படைகள் தள்ளாடி, மன்னார் ஆகியவற்றை நோக்கியபடியும், தென்கிழக்குமுனைப் படைகள் மணலாறு, திருமலை வடக்கு ஆகியவற்றை நோக்கியவாறும் நிறுத்தப்பட்டுள்ளன. புலிகளின் வடமுனைப் படைகள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் ஸ்ரீலங்கா இராணுவம் குவித்து வைத்துள்ள பெரும் படைவளங்களை நோக்கியவாறு நிறுத்தப்பட்டுள்ளன.கிழக்கில் கருணா மீது புலிகளின் இராணுவ ஒழுக்காற்று நடவடிக்கையில் ஸ்ரீலங்காப் படையினர் நேரடியாகத் தலையிட்டதால் போர் தொடங்கிற்று என வைத்துக்கொள்வோம். ஸ்ரீலங்கா அரசும் அதன் படைத் தளபதிகளும் முதலில் எதைப்பற்றி அக்கறைப்பட்டிருப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?புலிகளின் தென்கிழக்கு முனைப் படைகள் மணலாற்றிலுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் அரண்களை உடைத்தால் திருமலை வடக்கும் அதன் காரணமாக திருமலைத் துறைமுகத்தின் இருப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளகும். புலிகளின் மேற்குமுனைப் படைகள் தள்ளாடியை உடைத்தால் புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையில் வேறு பெரும் தடைகள் இல்லை. இதனால் புத்தளமும் இலங்கையின் பொருளாதார இயங்குதளமான மேற்குக் கரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். புலிகளின் வடமுனைப் படைகள் குடாநாட்டில் எந்தவொரு உடைப்பை ஏற்படுத்தினாலும் அங்குள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் பெரும் படைவளங்கள் (பீரங்கிகள், கவசவாகனங்கள், எறிகணைகள், இன்னோரன்ன) அச்சுறுத்தலுக்குள்ளாகும். ஏனெனில் இவை எவற்றையும் அங்கிருந்து வெளியெடுக்க முடியாது.மேற்படி மூன்று முனைகளில் ஒன்றைப்புலிகள் உடைத்தாலும் அதை காப்பாற்றுவதற்காகவே ஸ்ரீலங்கா அரசு தனது இராணுவ வளங்களை பயன்படுத்தும். இது இயல்பு. இதற்காக போரியல், கேந்திர அல்லது பொருளாதார முக்கியத்துவமற்ற இடங்களிலிருந்து படைகளை வெளியெடுத்து அவற்றை மேற்படி முனைகளை பாதுகாக்க அனுப்பிவைக்கும். இது போரியலின் அடிப்படைப் பாடம்.போரைத் தொடங்கினால் ஆபத்து வடக்கில் தான் இருக்கின்றது என்பது ஸ்ரீலங்கா படைத் தளபதிகளுக்கு நன்றாகவே தெரியும்.மேற்படி மூன்று முனைகளில் எதற்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதை சமாளிக்க படைகளை வெளியெடுக்கக்கூடிய இடம் வடக்குக் கிழக்கில் ஒன்றே ஒன்று தான். அது மட்டக்களப்பு. ஏனெனில் ஈழப்போரின் இராணுவப் புவியியல் சமநிலையில் மட்டக்களப்பிற்கு கேந்திர, போரியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் எதுவும் கிடையாது. புத்தளத்தைக் காப்பாற்றுவதா? மட்டக்களப்பைக் காப்பாற்றுவதா? அல்லது திருமலைத் துறைமுகத்தைக் காப்பாற்றுவதா மட்டக்களப்பை காப்பாற்றுவதா? அல்லது குடாநாட்டில் குவிக்கப்பட்டுள்ள தமது பாரிய இராணுவ வளங்களைக் காப்பாற்றுவதா மட்டக்களப்பைக் காப்பாற்றுவதா? என்ற கேள்விகள் எழும்போது ஸ்ரீலங்கா அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை நான் உங்களுக்கு விரிவாக விளக்குமளவிற்கு நீங்கள் மடையரல்லர்.மட்டக்களப்பு விவகாரத்தில் தலையிட்டு அந்தரத்தில் இருக்கும் இலங்கைத் தீவின் படைவலுச் சமநிலையை புலிகளின் பக்கம் சாய்க்க இதன் காரணமாகவே யாரும் முன் வரவில்லை.

29.08.2003 சிவராம்.

சுயநிர்ணய உரிமை, ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோர் தரும் பாடம் June 13, 2008

Posted by Athiran in சிவராம்.
Tags: , , , , ,
add a comment

இலங்கையில் இன்று நிரந்தர அமைதி ஏற்படுமா, இல்லையா என்பதற்கு புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம் ஒரு வரலாற்று உரை கல்லாக அமைந்துள்ளது. இதில் காணப்படும் தமிழர் சுயநிர்ணய உரிமை பற்றிய அடிப்படை கருத்தையே சிங்கள தேசம் பெரும் அச்சுறுத்தலாகவும் நசுக்கப்படவேண்டிய சவாலாகவும் கருதி செயற்படுகின்றது.இலங்கை தீவை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம் வெளியேறிய கணத்திலிருந்து இன்றுவரை இத்தீவின் வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை சிங்கள தேசத்திடம் ஒப்புக்கொடுக்கவில்லை என்ற வரலாற்று உண்மையின் அடித்தளத்திலேயே வட்டுக்கோட்டைத் தீர்மானமும் (1976) சுதந்திரத் தமிழீழ அரசை அமைப்பதற்கான சர்வஜன வாக்காக தமிழர் தாயகத்தில் 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலும் 1985 ஆம் ஆண்டு கூட்டணியும் அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களும் ஒருமித்துப் பிரகடனப் படுத்திய திம்புக் கோட்பாடுகளும் புலிகள் இன்று முன்வைத்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டமும் அமைந்துள்ளன.
எமது சுயநிர்ணய உரிமை சரியாக அங்கிகரிக்கப்படாத எந்த ஒரு அரசியல் தீர்வும் எம்முடைய சமூகத்தின் வேலையில்லாப் பிரச்சினை தொடக்கம் நிலப்பயன்பாட்டுச் சிக்கல்கள் வரை எதையுமே தீர்க்கக்கூடிய நிரந்தர அடிப்படையாக இருக்க முடியாது என்ற உண்மையை பல படித்த தமிழர்கள் கூட புரிந்து கொள்ளாது உளறித் திரிகின்றனர். எமது சுயநிர்ணய உரிமை என்பது சிங்கள தேசம் கற்பனை செய்வதுபோல இலகுவாகத் து}க்கியெறிந்து விடக்கூடிய விடயமல்ல. ஏனெனில், சர்வதேச சமூகம் அண்மைக் காலங்களில் சுயநிர்ணய உரிமையை புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் நடைமுறையாக ஏற்கத் தலைப்பட்டுள்ளது. போனகிழமை இது தொடர்பாக நாம் சூடானின் அரசியலைப் பற்றிப் பார்த்தோம்.
இன்று கிழக்குத் தீமோரைப் பற்றிச் சுருக்கமாக நோக்குவோம்.கிழக்குத் தீமோரின் சுயநிர்ணய உரிமைக்கான வரலாற்றுக் காரணங்களைப்போல எமக்கும் ஆணித்தரமான காரணங்கள் உண்டு என்பதை அரசியல்வாதிகள் எமது மக்களுக்கு தெளிவுபடுத்தக்கூடிய வகையில் களத்தில் இறங்கிச் செயற்படவேண்டும்.
கிழக்கு தீமோருக்கு அவுஸ்திரேலியாவைப் போல இந்தியா எமக்கு அமைந்துள்ளது. இதில் நாம் கற்கவேண்டிய பாடங்கள் பல எமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுப்பதைத் தடுக்க பாசிச அரசுகள் எவ்வாறு அமெரிக்கா, பிரித்தானிய ஆகியவற்றின் துணையோடு கைக் கூலிகளையும் ஒட்டுப்படைகளையும் (Para Militaries) எவ்வாறு கட்டவிழ்த்துவிடுகின்றன என்பதையும் கிழக்குத் தீமோர் எமக்குக் கற்றுத் தருகின்றது.
மேற்கத்தேய நாடுகள் பேசும் மனித உரிமை, ஜனநாயகம், நல்லாட்சி எல்லாவற்றையும்விட அவற்றிற்கு எண்ணெய் மற்றும் கனி வளங்கள், கடற்பாதைகள் என்பவையே முக்கியமானவை என்ற பாடத்தையும் நாம் கிழக்குத் தீமோரிலிருந்து தெளிவாகக் கற்றுக் கொள்ளலாம். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு மேற்கொண்டு படியுங்கள். தீமோர் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்குமிடையில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீவாகும்.
அவுஸ்திரேலியா தனது பாதுகாப்புக்கு இன்றியமையாத ஒரு இடமாக தீமோரைக் கருதி வருகின்றது. அது மட்டுமின்றி இருநாடுகளுக்குமிடைப்பட்ட கடற்பகுதியில் இருக்கின்ற பெரும் எண்ணெய் வளத்தை தனதாக்கிக் கொள்வதிலும் அவுஸ்திரேலியா குறியாக இருக்கின்றது. கிழக்குத் தீமோரின் விடுதலைப் போராட்டம் அவுஸ்திரேலியாவினுடைய இவ்விரு நலன்களின் அடிப்படையில் பல இன்னல்களை சந்தித்தது. சுதந்திர கிழக்குத் தீமோருடைய இறைமையை இந்த அடிப்படையிலேயே அவுஸ்திரேலியா மட்டுப்படுத்த முனைகின்றது.13 ஆம் நு}ற்றாண்டுக்கு முன்னர் தீமோரின் வரலாறு பற்றி அறியப்படவில்லை. சீன வர்த்தகர்களும் தமிழரும் பண்டைக்காலத்தில் அங்கு கிடைக்கப்பெறும் சந்தன மரங்கள், தேன், மெழுகு ஆகியவற்றை பெறுவதற்கு தீமோருக்குச் சென்று வந்தனர். தீமோர் தீவில் பல்வேறு மொழிகளைப் பேசும் பழங்குடிகள் வாழுகின்றனர். அந்நாட்டில் பெரும் பகுதி மலைப்பாங்கான பிரதேசமாகும்.பெரும்பான்மையான மக்கள் சேனைப் பயிர்ச்செய்கை விவசாயம் ஆகியவற்றிலே ஈடுபட்டிருக்கின்றனர். கரையோரப் பகுதியிலுள்ள சிலர் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர்.பெரும்பான்மையான மக்கள் எழுத்தறிவில்லாதவர்களாகவும் புராதன மதங்களை பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துக்கேயவர்த்தகர்கள் தீமோர் தீவில் 1509 ஆம் ஆண்டு காலடி வைத்தனர்.இதன் பின்னர் 1556 இல் அவர்கள் அங்கு தமது ஆதிக்கத்தினை நினைநாட்டினர். இந்தோனேசியாவில் 17 ஆம், 18 ஆம் நு}ற்றாண்டுகளில் ஒல்லாந்தர் கால் வைத்த பின்னர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான ஆச்சே மற்றும் தீமோர் தொடர்பாக போர்த்துக்கேயர்களுக்கும் அவர்களுக்குமிடையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது.இதன் இறுதியில் 1859 ஆம் ஆண்டு இருநாடுகளும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீமோர் தீவை கிழக்கு மேற்கு என பிரித்து எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் 1975 ஆம் ஆண்டு வரை கிழக்குத் தீமோர் போர்த்துக்கலின் இறைமைக்கு உட்பட்ட ஒரு பிராந்தியமாக இருந்து வந்தது.இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர் தீமோர் தீவைக் கைப்பற்றினார். அவுஸ்திரேலியாவின் மீது படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்றுவதற்கான ஒரு முன்தளமாக அவர்கள் தீமோரில் போர் தயாரிப்புகளைச் செய்யலாயினர். இதை முறியடிக்க அவுஸ்திரேலியா தனது விசேட படையினர் 250 பேரை அனுப்பி அங்கு ஜப்பானியருக்கு எதிரான கெரில்லாப் போரொன்றைத் தொடங்கியது. இதன் மூலம் தமது நாட்டின் மீது ஜப்பான் திட்டமிட்டபடி உரியநேரத்தில் படையெடுக்காது தாமதமடைய வைக்கலாம் என அவுஸ்திரேலியர் எதிர்பார்த்தனர்.ஜப்பானியருக்கு எதிரான கெரில்லாப் போரில் அவுஸ்திரேலியருக்குத் துணையாக பல்லாயிரக்கணக்கான கிழக்குத் தீமோர் மக்களும் இணைந்து போராடினர். இதில் அறுபதாயிரம் கிழக்குத் தீமோர் மக்கள் உயிரிழந்தனர்.1974 ஆம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டில் ஒரு இராணுவச் சதிப்புரட்சி நடைபெற்றது. இதன் காரணமாக அந்நாடு அங்கோலாபோன்ற தனது காலனிகளில் வைத்திருந்த பிடி தளரத் தொடங்கிற்று. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிழக்குத் தீமோரிலும் அதன் சுயநிர்ணய உரிமையை நிலை நாட்டும் நோக்குடன் படித்த இடதுசாரி இளைஞர்கள் பிரேட்டிலின் என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார்கள்.அதே காலப்பகுதியில் தீமோர் ஜனநாயக யுனியன் என்ற கட்சியும் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தாம் கிழக்குத் தீமோரை தனிநாடாக பிரகடனப் படுத்தப்போவதாகவும் ஆனால், இந்தோனேசியாவின் பாதுகாப்புக்குக் குந்தகம் இல்லாத வகையிலும் அதன் கேந்திர மற்றும் பொருளாதார நலன்களுக்கு ஏற்ற வகையிலும் தமது நாடு தனது வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொள்ளும் என இந்தோனேசிய அரசுடன் கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தன. சுரியான பதில் கிடைக்காதநிலையில் பிரேட்டிலின் அமைப்பு தேசங ;களின் சுயநிர்ணயக்கோட்பாட்டின் அடிப்படையில் கிழக்குத் தீமோரை ஒரு தனி நாடாக 1975 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பிரகடனப்படுத்திற்று. இதைத் தொடர்ந்து அவ்வமைப்புக்கும் இந்தோனேசிய உளவுத் துறையின் பின்னணியில் இயங்கிய ஒரு குழுவுக்குமிடையில் ஏற்பட்ட மோதலைச் சாட்டாக வைத்து 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியப்படைகள் கிழக்குத் தீமோர் மீது படையெடுத்தன. 1976 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்குத் தீமோர் இந்தோனேசியாவின் 27 ஆவது மாகாணமாக பிரகடப்படுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் கிழக்குத் தீமோரில் தனக்கு எதிரான சக்திகள் அனைத்தையும் பூண்டோடு அழிக்கும் நோக்கில் இந்தோனேசிய இராணுவம் ஒரு இலட்சம் மக்களுக்கு மேல்கொன்று குவித்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டனர். மேலும் பல்லாயிரம் மக்கள் அகதிகளால் வீடு வாசல்களை விட்டு மேற்குத் தீமோரில் தஞ்சம் புகுந்தனர்.இந்தோனேசிய படைகளுக்கு எதிராக ஆரம்பத்தில் பிரேட்டிலின் விடுதலை அமைப்பின் படைப்பிரிவான பலின்ரின் வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு எந்தவித வெளி உதவிகளும் இருக்கவில்லை. கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கத்தின் இராணுவப் பிரிவை போர்த்துக்கீச இராணுவத்தில் பணியாற்றி வெளியேறிய பல அதிகாரிகள் இணைந்து உருவாக்கினர். போர்த்துக்கீச இராணுவம் ஆங்காங்கே விட்டுச் சென்ற மற்றும் களவாடப்பட்ட ரைபிள்களை கொண்டே விடுதலை இயக்கத்தின் இராணுவம் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. அத்துடன் மரபு வழி இராணுவத்திற்குரிய பயிற்சிகளின் அடிப்படையிலேயே விடுதலைப்போராளிகள் உருவாக்கப்பட்டனர்.ஆனால் இந்த போராட்டத்தை இந்தோனேசியப் படைகள் அமெரிக்க, பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலிய சிறப்புப் படைகளின் ஆலோசனைக்கு இணங்க மிகக் கொடூரமான முறைகளின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. கிழக்குத் தீமோர் கெரில்லாக்கள் பலமாக இருந்த மலைப்பிராந்தியங்களில் அவர்களை தனிமைப்படுத்தி அழிப்பதற்காக இந்தோனேசிய இராணுவம் உணவு, மருந்து ஆகியவை உட்பட்ட முற்று முழுதான பொருளாதாரத் தடையை போட்டது. கால்களின் வேலி என அழைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில மலைச் சாரல்களில் இருந்த பல நு}ற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தோனேசியப் படையினரால் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். இவர்கள் கம்பியால் அடைக்கப்பட்ட இராணுவவலையங்களுக்கு உட்பட்ட அகதி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.தேச, வர்க்க விடுதலைக்காக போராடும் கெரில்லாக்கள் தமது மக்களிடையே கடலில் மீன்கள் வாழ்வதைப் போன்று செயற்படவேண்டும் என சீனப் புரட்சித் தலைவர் மாசேதுங் கூறுகிறார்.எனவே, தண்ணியை இறைத்துவிட்டால் அதில் வாழும் மீன்கள் இறந்து விடும்என்ற அமெரிக்க, பிரித்தானிய எதிர் கெரில்லா போரியல்கோட்பாட்டின் அடிப்படையிலேயே இவ்வகையான கொடூரமான நடவடிக்கைகளை இந்தோனேசிய இராணுவம் மேற்கொண்டது.இந்தோனேசியப் படைகளுக்கு அமெரிக்க, பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலிய சிறப்புப் படைகள் நவீன எதிர் கெரில்லாப்போரியல் முறைகளில் தொடர் பயிற்சி வழங்கின என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.கிழக்குத் தீமோர் மக்களிடையே காணப்பட்ட பல்வேறு வட்டார மற்றும் மொழி, மத பிரிவுகளையும் முரண்பாடுகளையும் இந்தோனேசிய இராணுவம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான பல மோசமான ஒட்டுப்படைகளையும் கைக்கூலிகளையும் உருவாக்கியது. இந்த ஒட்டுப்படைகள் தாம் விரும்பியபடி அட்டூழியங்களில் ஈடுபட்டன.
கிழக்குத் தீமோர் சமுகத்தில் காணப்பட்ட மேற்படி முரண்பாடுகளை இந்தோனேசிய இராணுவம் மிக நுட்பமாகப் பயன்படுத்தியதன் மூலம் அந்நாட்டின் சுயநிர்ணய உரிமை பற்றிய ஒருமித்த கருத்தை பிரேட்டிலின் அமைப்பு அரசியல் ரீதியாக கட்டியெழுப்ப விடாமல் பார்த்துக் கொண்டது. (கிழக்குத் தீமோர் விடுதலைப் போராட்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பலர் முக்கிய பங்காற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது).கிழக்குத் தீமோரில் இந்தோனேசிய இராணுவம் 1975 ஆம் ஆண்டின் பின் செய்த மிக மோசமான படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் என்பது போன்ற அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல்கள் பற்றி மேலைத்தேய ஊடகங்கள் அந்த நேரத்தில் கண்டு கொள்ளவில்லை.இதற்குக் காரணம் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பரவுவதை தடுப்பதற்கு அக்காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு இருந்த மிக முக்கியமான கூட்டாளி நாடாக இந்தோனேசியா அமைந்திருந்ததே ஆகும். அத்துடன் மாக்சீய இயக்கமான கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கம் வெற்றி பெற்றால் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு இன்றியமையாதென கருதப்பட்ட ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் சோவியத் யூனியனின் கைக்குள் போய்விடும்.
எனவே கிழக்குத் தீமோரை இந்தோனேசியாவின் மிகக் கொடூரமான பிடிக்குள் வைத்திருப்பதையே அமெரிக்காவும் அதன் கூட்டு நாடான அவுஸ்திரேலியாவும் விரும்பின. இதன் காரணமாக கிழக்குத் தீமோர் விடுதலைப் போராட்டத்தையும் அந்தப் போராட்டத்தையொட்டி இந்தோனேசிய இராணுவம் அங்கு செய்த பயங்கரமான செயல்களையும் மேற்கத்திய ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை.1985 ஆம் ஆண்டளவில் தீமோர் விடுதலை இயக்கம் தனது மாக்சீய நிலைப்பாட்டிலிருந்து விலகி முழுமையான தேசிய விடுதலைக்கோட்பாட்டினைக் கொண்ட ஒரு அமைப்பாகத் தன்னை இனங்காட்டிக்கொண்டது. இதன் மூலம் கிழக்குத் தீமோர் விடுதலை தொடர்பாக அவுஸ்திரேலியாவுக்கும் அதன் மேற்குலக கூட்டு நாடுகளுக்கும் இருந்த அச்சங்களை அகற்றலாமென அது எண்ணிற்று.1990 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததோடு உலக அரசியல் நிலமைகள் முற்றாக மாறின.
சோவியத் யூனியன் தென் கிழக்காசியாவில் காலு}ன்றுவதைத் தடுத்திடுவதற்கான ஒரு தளமாக இந்தோனேசியா பேணப்படுவதற்கான தேவை அமெரிக்காவிற்கு இல்லாமல் போனது. அத்தோடு இந்தோனேசியாவின் அமெரிக்கச் சார்பு சர்வாதிகாரியான சுகார்த்தோவும் பதவி இறங்கவேண்டியதாயிற்று. இக்காலகட்டத்திலேயே கிழக்குத் தீமோர் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி மேலைத்தேய ஊடகங்கள் கவனமெடுக்கத் தொடங்கின. 1991 ஆம் ஆண்டு அங்கு ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது இந்தோனேசிய இராணுவம் செய்த படுகொலையொன்று பெரியளவில் மேலைத்தேய ஊடகங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கத் தலைவரை இந்தோனேசிய படைகள் கைது செய்து 20 வருட சிறைத் தண்டனை வழங்கின.1998 ஆம் ஆண்டு சுகார்த்தோவை அடுத்துப் பதவிக்கு வந்த இந்தோனேசிய ஜனாதிபதி கபீப கிழக்குத் தீமோரில் அதன் சுயநிர்ணய உரிமையை தீர்மானிப்பதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அறிவித்தார். இதன் பின்னணியில் அவுஸ்திரேலியா செயற்பட்டதாகக் கருத இடமுண்டு. அதாவது கிழக்குத் தீமோருக்கு வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தைக் கொடுத்து அந்நாட்டையும் அதன் கடலில் காணப்படும் எண்ணெய் வளங்களையும் நிரந்தரமாகவே தன் கைக்குள் வைத்துக் கொள்ளலாம் என அவுஸ்திரேலியா கருதியதாலேயே அது கிழக்குத் தீமோர் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென இந்தோனேசிய அரசின் மீது அழுத்தம் கொடுத்தது. அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பொம்மையாக இருந்த சுகாத்தோவின் வீழ்ச்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த அரசுகள் கிழக்குத் தீமோரின் வளங்களை அவுஸ்திரேலியா பயன்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போடலாம் என அவுஸ்திரேலியா பயந்ததும் இதற்கு முக்கிய காரணமாகும். 1999 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்குத் தீமோரின் சுயநிர்ணய உரிமையை வழங்குவது தொடர்பான ஒரு ஒப்பந்தத்தில் போர்த்துக்கலும் இந்தோனேசியாவும் கைச்சாத்திட்டன. அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக கிழக்குத் தீமோரின் இந்தோனேசிய இராணுவத்துடன் செயற்பட்டு வந்த ஒட்டுப்படைகள் அனைத்தும் வாக்கெடுப்புக்கு முன்னர் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் இணங்கப்பட்டது.எனினும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகள் சபை முற்பட்ட வேளையில் இந்தோனேசியப் படைகளின் உதவியோடு ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோரில் பயங்கர அழிவு நடவடிக்கைகளில் இறங்கின. இதனிடையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எண்பது சதவீதமான கிழக்குத் தீமோர் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து மேற்படி ஒட்டுப்படைகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீ வைப்பு நடவடிக்கைகளில் இறங்கியதால் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இவ்வொட்டுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். கிழக்குத் தீமோரின் தலைநகரமான டிலி நாசமாக்கப்பட்டது. ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இந்த நிலைமைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக 99 செப்ரெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவின் தலைமையில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையொன்று கிழக்குத் தீமோரில் சென்று இறங்கியது. இதன் பின்னர் அங்கு ஒழுங்கு ஓரளவு நிலைநாட்டப்பட்டது. ஆனால் கிழக்குத் தீமோர் விடுதலைப் படை நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அது ஆயுதங்களைக் களையவேண்டும் என்ற நிபந்தனையும் போடப்பட்டது. இதை அதன் சில தளபதிகள் எதிர்த்தபோதும் எதுவும் செய்ய முடியாது இருக்கின்றனர்.1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் கிழக்குத் தீமோருக்கான இடைக்கால நிருவாகமொன்று அமைக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு முதலாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கத்தலைவர் சனானா குஸ்மாவோ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். தற்போது கிழக்குத் தீமோரின் எண்ணெய் வளங்களை தான் பயன்படுத்துவதற்கும் அந்நாட்டின் அரசியலையும் பாதுகாப்பையும் தன்கைக்குள் வைத்திருப்பதற்கும் அவுஸ்திரேலியா முயற்சி செய்து வருகின்றது.(காத்தான்குடியில் சூப்பும் கிழங்கும் அடித்துவிட்டு மட்டக்களப்பு சாந்தி தியேட்டரில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். முதல் நாள் காட்சி பார்க்கலாம் என நான் போட்ட திட்டத்தில் மண்ணைப் போட்டு இதை கட்டாயப்படுத்தி எழுத வைத்த வீரகேசரி வார இதழ் ஆசிரியர் தேவராஜுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்)

15.08.2004 சிவராம்